பரிசுத்த தேவனும் மகிமையான சத்தமும்!

சங்கீதம் 29, தேவனுடைய பரிசுத்தத்தின் மகிமையையும், அவரது சத்தத்தின் பெருமையையும் போற்றுகிறது. தெய்வீக வல்லமை மட்டும் அல்லாமல், தேவன் அன்பு, நீதி, இரக்கம் ஆகிய சிறப்புகளும் உடையவர். பரிசுத்தத்தின் அழகு 1 நாளாகமம் 16:29, 2 நாளாகமம் 20:21, சங்கீதம் 29:2, 96:9 ஆகிய இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. தேவனுடைய பரிசுத்தத்தை உணரும் ஒருவர், அவரை மண்டியிட்டு வணங்கி துதிப்பார். சங்கீதம் 29ல், கர்த்தரின் சத்தம் பற்றிய ஏழு சிறப்புகள் புகழப்படுகிறது; ஏழு என்பது பூரணத்தின் அடையாளமாகும்.

1.  தண்ணீர்களின் மேல் அதிகாரமுள்ளது: 
புயலிலோ, சுனாமியிலோ உள்ள ஆழ்ந்த நீரை எந்த மனிதரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தேவன், உலகத்தின் தொடக்கத்தில் இருந்தே நீரை அதிகாரத்துடன் ஆள்கிறார் (ஆதியாகமம் 1:2-3).

2. சக்தி வாய்ந்தது:  
தேவனுடைய வார்த்தைகள் பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாமையில் இருந்து கொண்டு வந்தன.

3. மாட்சிமை நிறைந்தது:  
பிரபஞ்சத்தில் எங்கும் தேவனின் சத்தத்திற்கு இணையான எந்த சத்தமும் இல்லை. 

4. கேதுருக்களை உடைக்கிறது: 
லீபனோனின் கேதுருக்கள் அவற்றின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு பெயர் பெற்றவை.  பல மன்னர்கள் அரண்மனைகளையும் கட்டிடக்கலையின் பிற அதிசயங்களையும் கட்டினார்கள்.  ஆனால் தேவனின் சத்தம் இந்த கேதுருக்களை நொறுக்கி தரையில் விழச் செய்யும். 

5. நெருப்புச் சுடர்கள் பிரகாசிக்கின்றன: 
தேவ வல்லமை நெருப்புடன் தொடர்புடையது.  தேவன் இஸ்ரவேல் மக்களை அக்கினி ஸ்தம்பங்களால் வழிநடத்தினார். எலியா ஜெபித்தபோது வானத்திலிருந்து நெருப்பால் நாதாபையும் அபியூவையும் நியாயந்தீர்த்தார்.

6.  வனாந்தரத்தையே அசைக்கிறது: 
தேவனுடைய ராஜ்யம் அசைக்க முடியாதது, மற்ற அனைத்தும் அசைகின்றன (எபிரெயர் 12:26-29).

7. மான்களைப் பிறக்க வைக்கிறது: 
தேவ சத்தம் விலங்குகளைப் பிரசவ வேதனைக்குத் தூண்டுவதற்குப் போதுமானது. 

இன்று தேவன் சத்தம் நமக்காக:
ஆவியினால் வாழவும் ஆவியின் கனியைக் கொடுக்கவும் கர்த்தருடைய சத்தம் நம்மை அழைக்கிறது (கலாத்தியர் 5:16-26). கர்த்தருடைய சத்தம் தேவனுடைய மக்களை நீதி செய்ய அழைக்கிறது (ஆமோஸ் 5:24; மீகா 6:8; மத்தேயு 23:23). கர்த்தருடைய சத்தம் ஏழைகளைப் பராமரிக்க தம் மக்களை அழைக்கிறது (நீதிமொழிகள் 19:17; மாற்கு 10:21).

நான் அவருடைய சத்தத்தைக் கவனமாகக் கேட்டு கீழ்ப்படிகிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran