கிறிஸ்தவர்கள் அவருடன் இருக்கவும், அவருக்கு ஊழியம் செய்யவும், அவருக்காக ஊழியம் செய்யவும் அழைக்கப்படுகிறார்கள். அனைத்து சீஷர்களும் நற்செய்தி, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் சரீரமான சபை மற்றும் தொலைந்து போனவர்கள் என எல்லாவற்றிற்கும் ஊழியர்கள். அவர்கள் சில குணங்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் மூன்று முக்கியமானவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய (HIS) ஊழியர்கள் என்பது H - (Humility) தாழ்மை, I - (Integrity) நேர்மை மற்றும் S - (Simplicity) எளிமை என்பதைக் குறிக்கும். அனைத்து சீஷர்களும் உலகையே தலைகீழாக மாற்றி சமுதாயத்தில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும் கர்த்தராகிய ஆண்டவரின் தீவிர ஊழியர்களாக இருக்க வேண்டும்.
தாழ்மை:
தீவிர சீஷர்கள் பணிவுள்ளவர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறை, உறவுகள், வார்த்தைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் இதை நிரூபிக்கிறார்கள். தேவன் பெருமைக்கு எதிரானவர், நிச்சயமாக, பெருமையே வீழ்ச்சிக்குக் காரணம். தேவ கிருபை தாழ்மையானவர்கள் மூலம் வெளிப்படுகிறது. பல்வேறு மதங்களின் பல துறவிகள் உலகத்தை வெறுக்கத்தக்கதாக கருதும் அதே வேளையில், தேவனுடைய குமாரன் மனிதனாகவும் மனிதர்களோடே வாசம் செய்யவும் தன்னைத் தானே தாழ்த்தினார் (யோவான் 1:14). கெத்செமனே தோட்டத்தில் அவருடைய வேதனையான ஜெபத்தின்போது பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் தன்னுடன் இருக்கும்படி கர்த்தர் தாழ்மையுடன் கேட்டார். தேவக் குமாரனாக, பலவீனமான மனிதர்களிடம் அவர் அத்தகைய கோரிக்கையை வைக்க வேண்டியதில்லையே.
நேர்மை:
ஒரு மேய்ப்பனைப் போல நேர்மையான இதயத்துடன் மக்களை வழிநடத்தியதற்காக தாவீது பாராட்டப்படுகிறான் (சங்கீதம் 78:72). நேர்மை என்பது பாசாங்குத்தனத்திற்கு எதிரானது. சவுல் ராஜாவாக நிராகரிக்கப்பட்டான், ஆனால் மக்கள் இந்த உண்மையை அறியாதபடி சாமுவேல் தன்னுடன் நிற்க வேண்டும் மற்றும் அப்போது ஜனங்களும் தன்னை ஒரு ராஜாவாக மதிக்கவும் நடத்தவும் என்று அவன் விரும்பினான். நாத்தான் தாவீதை விபச்சாரத்திற்காக எதிர்கொண்டபோது, அவன் தனது பாவத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு ஒரு சங்கீதத்தை எழுதினான் (சங்கீதம் 51).
எளிமை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவக் குமாரன் என்றாலும், தம் சீஷர்களுடன் எளிமையான வாழ்க்கை முறையை வாழத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு தலைசாய்க்க இடமில்லை, சோர்வாக இருந்ததால், படகில் தூங்கினார். பசியெடுத்தபோது அவர் ஒரு மரத்திலிருந்து உணவைத் தேடினார், அது பலனளிக்காததால் சபிக்கப்பட்டது.
சிலுவையின் ஊழியர்கள்:
அனைத்து சீஷர்களுமே சிலுவையின் ஊழியர்களே. கிறிஸ்து கல்வாரி சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியின் முழுமையையும் அறிவிக்கவும் சிலுவையைச் சுமக்கவுமே அழைக்கப்பட்டுள்ளோம்.
அவருடைய ராஜ்யத்திற்காகவும் மகிமைக்காகவும் நான் அவருடைய ஊழியக்காரராக பணி செய்ய ஆயத்தமா?
Rev. Dr. J.N. Manokaran