நெடுஞ்சாலை

உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இந்தத் தடைகளைத் தாண்டி, நகர நிர்வாகம் நெடுஞ்சாலைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. பல தடைகள் மற்றும் இடையூறுகள் இல்லாமல் இலக்கை அடைவதே இதன் நோக்கம். “எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்” (நீதிமொழிகள் 15:19). துரதிர்ஷ்டவசமாக, எல்லா வழிகளும் ஒரே இலக்கை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்று பலர் நம்புகிறார்கள், இது தர்க்கத்திற்குப் புறம்பானது மற்றும் சாத்தியமற்றது.

மனந்திரும்புதலின் பாதை:
நீதியான வாழ்க்கையை அல்லது நேர்மையான வாழ்க்கையை நடத்த விரும்புவோர் தீமையைத் தவிர்க்கிறார்கள். அதற்காக, அவர்கள் சத்தியத்தைப் பின்பற்ற பாவ வழிகளிலிருந்து மனந்திரும்புவதை தெரிவு செய்கிறார்கள். “நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக் கொள்கிறான்” (நீதிமொழிகள் 16:17). துரதிர்ஷ்டவசமாக, தேவபக்தியற்ற மக்கள் மனந்திரும்புதலின் வழியை அவமானமாகவும், இழிவாகவும் எண்ணி கேலி செய்கிறார்கள்.

இரட்சிப்பின் பாதை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இரட்சிப்பின் வழி (யோவான் 14:6). மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு வேலையில் விசுவாசம் வைக்கும் பாவிகள் இரட்சிப்பின் பாதையில் இருக்கிறார்கள். தாழ்மை இல்லாதவர்கள், தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தங்கள் கண்ணோட்டத்தில்  ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும் (நீதிமொழிகள் 14:12). சிலர் பயனற்ற சிந்தனையாலும், மற்றவர்கள் மரபுகளாலும், மற்றவர்கள் அன்றைய கலாச்சாரங்களைப் பின்பற்றுவதன் மூலமும் மரண வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பரிசுத்தப் பாதை: 
தேவன் பரிசுத்தர். அவரைப் பின்பற்றத் தேர்ந்தெடுப்பவர்கள், பரிசுத்தப் பாதையில் நடக்கிறார்கள் (ஏசாயா 35:8).  உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள்; ஆம், அவரைப் பின்பற்றுகிற ஜனங்கள் பரிசுத்தராக இருக்க வேண்டும் (1 பேதுரு 1:15-16). பரிசுத்த தேவன் பரிசுத்தத்தின் மகிமையில் தொழுது கொள்ளப்பட வேண்டும் (சங்கீதம் 96:9).

சத்தியப் பாதை: 
பொய்யின் பல குறுக்கு வழிகள், கட்டுக்கதைகளின்  முட்டுச்சந்தான சாலைகள் மற்றும் ஆபத்தான விளிம்பில் முடியும் பாரம்பரிய பாதைகள் உள்ளன.  சத்தியத்தின் ஒரே ஒரு நெடுஞ்சாலை மட்டுமே உள்ளது, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. சத்தியம் சார்புடையது அல்லது புலனாகதது அல்ல, ஆனால் முழுமையானது.

பரலோகத்திற்குச் செல்லும் பாதை: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்தார், மனிதர்களிடையே வசித்தார். அவர் மட்டுமே அந்த வழியை அறிந்திருப்பதால், நம்மை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஒருவரை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வது பல மறுபிறப்புகள் அல்ல, வெறும் நற்செயல்கள் மாத்திரம் அல்ல, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசமே பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

எனது வாழ்க்கைப் பயணம் பரிசுத்தத்தின் பாதையில் உள்ளதா?
 

Rev. Dr. J.N. Manokaran