இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள பஹ்ரா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் 22 வயதான ரஜத் குமாரை, பல்கலைக்கழக விடுதியில் வசித்து வந்த சக மாணவர்கள் இருவர், மற்றொரு அறைக்கு வரும்படி கேட்டுள்ளனர். குமார் மறுத்ததால், அவர்கள் அவனை அறைக்கு இழுத்துச் சென்றனர், அங்கு சில மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்கள் குமாரை மது அருந்தச் சொல்லி அவனை அடித்து, உதைத்து துன்புறுத்தினர், அது மாத்திரமல்ல அவன் இணங்க மறுத்ததால் பெல்ட்டால் அடித்தார்கள். மாணவர் மீதான தாக்குதல் கேமராவில் சிக்கியது மற்றும் அவனது கல்லூரி தோழர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் அவனை விட இளையவர்கள் (NDTV செப்டம்பர் 11, 2024). “அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள்” (ஏசாயா 5:22-23) என்பதாக தீர்க்கதரிசி கூறுகிறார்.
நாயகர்கள்:
பலர் குடித்துவிட்டு தங்களை ஹீரோவாகக் கருதுகிறார்கள். அதிகமாகக் குடிப்பவர்களும் பெருந்தீனிக்காரர்களும் வறுமையால் ஆட்கொள்ளப்படுவார்கள் என வேதாகமம் எச்சரிக்கிறது (நீதிமொழிகள் 23:20,21). வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும் தெரியாதவர்கள் குடித்துவிட்டு மற்றவர்களும் தங்களைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள் ஹீரோக்களாக மாறுகிறார்கள்.
வீரம்:
இந்த மாணவர்கள் தங்களை தைரியசாலிகளாகக் கருதினர். மற்றவர்கள் தங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் செய்ய வைக்கும் சக்தியும் அதிகாரமும் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். இந்த ஐவரும் தங்கள் பலத்தை ஒன்றிணைத்து, தன்னை தற்காத்துக் கொள்ள வழியில்லாமல் தனிமையில் இருந்த ஒரு மனிதனை துன்புறுத்தினர். மற்றவர்களுக்காக தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள், மற்றவர்களை தங்கள் விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் தான் வீரம் மிக்கவர்கள்.
சீர்கேடு:
இந்த ஐந்து மனிதர்களும் தார்மீக ரீதியில் ஊழல்வாதிகள் மற்றும் மற்றவர்கள் கெட்டுப்போக வேண்டும் என்று விரும்பினர். அநேகமாக, அவர்கள் இந்த மனிதனை நேர்மையானவராகவும், தெய்வபக்தியுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் பார்த்திருக்கலாம். அவர்களால் அவரைப் போல இருக்க முடியாது என்று மிகவும் பொறாமைப்பட்டு இருப்பார்கள். பொறாமையால் உந்தப்பட்ட அவர்கள் அவரை தங்கள் சீர்கேடான நிலைக்கு இழுக்க விரும்பினர்.
மற்றவர்களின் உரிமைகளை பறித்தல்:
தீய குடிகாரர்கள் அப்பாவிகளின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். மாணவன் ரஜத் குமார் தான் விரும்பியதை உண்ணவும் குடிக்கவும் தனது உரிமையை அனுபவிக்க அனுமதிக்கப்படவில்லை. மற்றவர்கள் அவனை வற்புறுத்தினார்கள், அதை அவன் மறுத்தான். அதற்காக அடி, அவமானம், மன ரீதியிலான சித்திரவதைகளைச் சகிக்க வேண்டியிருந்தது.
என்னைப் பரிசுத்தமாக காத்துக் கொள்ள, தானியேலைப் போல நான் தீர்மானிப்பேனா?
Rev. Dr. J.N. Manokaran