இளைஞர்கள் பரிசுத்தமும் தூய்மையும் கொண்ட வாழ்வை நடத்த விரும்பினால், அவர்கள் தேவனுடைய வார்த்தையை இதயத்தில் வைத்திருக்க வேண்டும் (சங்கீதம் 119:9). அதை கேட்பதாலும், புரிந்துகொள்வதாலும், வாழ்வில் பயன்படுத்துவதாலும் சாத்தியமாகும். ஞானத்தைக் கேட்பவர்களின் இருதயத்திற்குள் ஞானம் வரும்; அறிவு ஆத்துமாவுக்கு இனிமையாய் இருக்கும்; விவேகம் காக்கும்; புத்தி காவலாயிருக்கும்; தீய வழியிலிருந்து விடுவிக்கும் (நீதிமொழிகள் 2:10-12).
தூய்மையின் அளவுகோல்:
பரிசுத்த வேதாகமம் தேவனுடைய குணாதிசயங்களையும், அவருடைய பரிசுத்தத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. அவரை அறிந்தால், தேவனுடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தூய்மையின் காரணம்:
தேவனுடைய வார்த்தை அவருடைய ஞானத்தையும் நன்மையையும் வெளிப்படுத்துகிறது. நன்மையான தேவன், பாவம், சாத்தான், உலகம் ஆகியவற்றிலிருந்து காக்கும் விதமாக தமது நியாயப்பிரமாணத்தை கொடுத்துள்ளார்.
தூய்மையின் சிரமம்:
ஒருவன் உயிரோடு இருக்குமளவில் சோதனைகளும் சாத்தானின் தாக்குதல்களும் இருக்கும். தேவனுடைய வார்த்தை விசுவாசிகளை எச்சரிக்கையும், விழிப்புணர்ச்சியுடனும், கவனத்துடனும் இருக்கும்படி எச்சரிக்கிறது.
தூய்மையின் ஆசீர்வாதம்:
தேவனுடைய வார்த்தையை கேட்டு, மனந்திரும்பி, பாவத்தை விட்டு, ஆண்டவராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களும், பாவங்கள் மூடப்பட்டவர்களும் பாக்கியவான்கள் (சங்கீதம் 32:1).
தூய்மையின் வழி:
தேவனுடைய வார்த்தை பரிசுத்தத்தின் வழியை கற்பிக்கிறது (ஏசாயா 35:8). அந்த வழியில் துன்மார்க்கர் நடக்கமாட்டார்கள்.
தூய்மையின் வெளிச்சம்:
தேவனுடைய வார்த்தை விசுவாசிகளின் கால்களுக்கு விளக்கும், பாதைக்கு ஒளியும் ஆகும் (சங்கீதம் 119:105). அந்த ஒளி ஆவிக்குரிய இருளையும், மூடுபனியையும், சோதனைகளின் பிம்பங்களையும் அகற்றுகிறது.
தூய்மைக்கான பணி:
தேவனுடைய வார்த்தை விசுவாசியை அசுத்தத்திலிருந்து சுத்திகரிக்கிறது (எபேசியர் 5:26). தேவனுடைய வார்த்தை சத்தியம்; அதுவே ஒருவரை சுத்திகரிக்கிறது (யோவான் 15:3; 17:17).
தூய்மையில் நடத்தல்:
தேவனுடைய வார்த்தை கண்ணாடி போலவும், அல்லது சிடி-ஸ்கேன் போலவும் உள்ளது. அது உள்ளார்ந்த ஆவிக்குரிய, நெறி நிலையை காட்டுகிறது. மனந்திரும்பச் செய்கிறது, பாவத்தை விலக்குகிறது, தூய்மையில் நடக்கச் செய்கிறது (யாக்கோபு 1:23-24).
தூய்மையான ஆவி மற்றும் மனம்:
தேவனுடைய வார்த்தை மனதைப் புதுப்பிக்கிறது. உலக கலாச்சாரம், பழக்கம், பரம்பரை, சடங்கு, மூடநம்பிக்கை, உலகக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது (ரோமர் 12:1-2).
நான் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran