இயல்பாகவே பல மனிதர்கள் நல்லவர்கள் என நம்ப விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சுவிசேஷகர், “மனிதர்கள் அனைவரும் பாவிகள்” என்று கூறும்போது, சிலர் அதற்கு எதிராகக் கோபமடைகிறார்கள். ஆனால் வேதாகமம் மிகத் தெளிவாக கூறுகிறது; “பரலோகத்திலிருந்து தேவன் மனிதர்களைக் கவனித்து கொண்டிருக்கிறார்” (சங்கீதம் 53:2-3). மனிதன் தேவனை மறந்துவிடலாம், ஆனால் தேவன் மனிதனை எப்போதும் கவனிக்கிறார். மனிதன் தன் விருப்பங்களின்படி நடக்க முயலுகிறான்; தேவன் அவர்களை அவர்களுடைய எண்ணங்களுக்கே விட்டுவைக்கிறார், ஆனால் அதனால் மீட்பு கிடைக்காது. மனிதனின் வீழ்ச்சியும் பாவத்தின் தன்மையும் உண்மையானதும் தெளிவானதுமாகவே இருக்கின்றன.
யாராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஓர் உண்மை:
கடவுள் மனிதர்களைப் பார்வையிட்டு பரிசோதிக்கிறார். அது அறிவுத் தேர்வாகவோ, நினைவுத் திறனைக் கணிப்பதாகவோ அல்ல. இது மனித உள்ளத்தின் ஆழத்தில் இருக்கின்ற ஆவிக்குரிய புரிதலும், ஒழுக்கநெறித் தேர்வுகளும் சார்ந்தது.
யாரும் தேடுவதில்லை:
மனிதர்கள் சத்தியத்தையோ, உண்மையான கடவுளையோ தேடுவதில்லை. நீதிக்கான பசியும் தாகமும் இல்லை (மத்தேயு 5:6).
அவர்கள் மதபரம்பரை, சடங்குகள், புண்ணியக் காரியங்கள், திருப்பணிகள் போன்றவற்றைச் செய்யலாம். ஆனால், அவர்கள் கடவுளை உண்மையாகத் தேடுவதில்லை. அவர்களுக்குள்ள ஆசை, தேவனை அடைய வேண்டும் என்று இல்லையெனில் கடவுளிடமிருந்து ஏதாவது பெறுவதாக இருக்கலாம்; ஆனால், கடவுளுடன் இணைதலும் தொடர்பு கொள்ளுதலும் விருப்பமாக இல்லை.
தவறிப் போனவர்கள்:
மனிதர்கள் ஆடுகளைப் போலத் திசைதெரியாமல் தவறிப் போவதற்கு உடனே ஆட்படும் இயல்புடையவர்கள் (ஏசாயா 53:6). வழி தப்பிய மைந்தனைப் போலவே, அவர்கள் தங்கள் சொந்த இடத்திலிருந்து விலகி, இந்த உலகத்துக்கும் அதன் கொள்கைகளுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்; கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆக இவை எல்லாம் அவர்களை விட்டு பிரிக்கின்றன.
பழுதானவர்கள்:
தேவனை விட்டு விலகி வாழும்போது, சாபம் இயல்பாகவே வருகிறது. இங்கு பயன்படுத்தப்படும் வார்த்தை ஒரு துர்நாற்றமூட்டும் சடலத்தைக் குறிக்கிறது. பாவம் துர்நாற்றமூட்டும் ஒன்றாகவே காணப்படுகிறது.
“தவறிப் போனார்கள்” அல்லது “விலகிப் போனார்கள்” என்பதன் பொருள், பழுதடைந்து, அழுகி, சுவையிழந்து போன நிலையைச் சொல்கிறது.
நன்மை செய்ய எவருமில்லை:
நன்மை செய்பவர்கள் ஒருவரும் இல்லை. கடவுளை மறுப்பது வெறும் மூடர்கள் மட்டுமல்ல; எல்லா மனிதர்களும் கடவுளின் முன் குற்றவாளிகளே. ஸ்பர்ஜனின் வார்த்தைகள்: “இந்தச் சித்திரமே மனித இனம்! கிருபை ஆண்டிடும் இடங்களைத் தவிர, யாரும் நன்மை செய்யவில்லை. வீழ்ந்த மனித இனம் ஒரு பஞ்சநிலம்; சோலை இல்லாத பாலைவனம், நட்சத்திரமில்லா இரவு, ரத்தினம் இல்லாத சாணக் குவியல், அடிவாரம் இல்லாத நரகம்”. வீழ்ந்த மனிதனால் நல்லது என்று கருதப்படும் எதுவும், தேவன் முன் அழுக்கான கந்தையே அதாவது மாதவிடாய் துணிபோல தான் (ஏசாயா 64:6) என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் கர்த்தரை அறிகிறேனா, உண்மைமாய் நேசிக்கிறேனா, அவருக்கு மாத்திரம் சேவை செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran