வின்ட்சர் கோட்டையில் விக்டோரியா மகாராணி ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஆப்பிரிக்க தூதருக்கு ஒரு சிறந்த வேதாகமத்தை வழங்குவதை சித்தரிக்கும் தாமஸ் ஜோன்ஸ் பார்க்கர் வரைந்த ஒரு வரலாற்று உருவப்படம் உள்ளது. அந்த ஆப்ரிக்க தூதுவர், 1838இல் விக்கோரியாவின் பட்டாபிஷேக விழாவில் பங்கேற்று 1842இல் மீண்டும் வந்த மொம்பாசாவின் ஆளுநரான அலி பின் நஸ்ர் என்பவராக இருக்கலாம். வேதாகமத்தை வழங்கும்போது மகாராணி இப்படியாக கூறினாள்; “பிரிட்டனின் மகத்துவத்தின் ரகசியம் வேதாகமமே.”
தேசங்கள் தோன்றின:
பொதுவெள்ளத்திற்கு பிறகு, நோவாவின் சந்ததிகள் பெருகத் தொடங்கினர். ஆனால் அவர்களுடன் பாவமும், தீய எண்ணங்களும் கூட அதிகரித்தன. தேவன் பூமியை நிரப்புமாறு அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தாலும், அவர்கள் பரவாமல் ஒரு நகரத்தை கட்டி, வானத்தைத் தொடும் உயரமான கோபுரம் அமைக்க விரும்பினர். இந்தக் கலகத்தையும் கீழ்ப்படியாமையும் தேவன் கண்டதால், அவர் அவர்களுடைய ஒரே மொழியை குழப்பினார். இதனால், அவர்கள் ஒருவரையொருவர் பேசிச் சமமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி மொழிப் பேதங்களால், அவர்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறினர். இதுவே நாடுகள் உருவான விதமாகும் (ஆதியாகமம் 11).
மகத்தான தேசம்:
சோதோம் மற்றும் கொமோராவை அழிக்க தேவன் தீர்மானித்தார். ஆனால் இது பற்றி ஆபிரகாமிடம் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்தார். “ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டார்” (ஆதியாகமம் 18:18-19). ஆபிரகாம், உண்மையையும் நீதியையும் போதிப்பதின் மூலம், பெரிய ஜாதிகளை உருவாக்குவான். இதனால்தான், புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தையும் மறுமலர்ச்சியையும் பெற்ற நாடுகள் உலகில் மகத்தான தேசங்களாக மாறினதில் ஆச்சரியமில்லை. அவர்கள் பூரணமானவர்கள் அல்ல, ஆனால் தேவன் அவர்களை தனது கருவிகளாகப் பயன்படுத்தினார்; வேதாகமம் அவர்கள் பண்பாட்டில் வேரூன்றியதால், அவை குறைவான ஊழலுடன் இருந்தன. இப்போது, தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பதால், அவை தங்களின் அடையாளத்தையும் வலிமையையும் இழந்து வருகின்றன.
நீதி:
நீதி ஒரு தேசத்தை உயர்த்துகிறது என்று வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 14:34). பரிசுத்த தேவனை அறியாமலும், அவருடைய நியாயச்சட்டங்களை ஏற்காமலும் நீதி நியாயம் என்ன என்பதை உணர முடியாது. அந்த நியாயச்சட்டங்கள் பிரசங்கிக்கப்படவும், கற்றுத்தரப்படவும், பயிற்றுவிக்கப்படவும் வேண்டும்.
நான் என் தேசத்தை ஒரு மகத்தான தேசமாக காண விரும்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran