தேவ வார்த்தை "தோரா" என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், தேவனுடைய போதனையும் வழிநடத்தலும் ஆகும். தாவீது, தேவனுடைய நீதியியல்பான நியாயப்பிரமாணம் குறித்து ஏழு முக்கியமான அறிக்கைகளைக் குறித்து தெரிவிக்கிறார் (சங்கீதம் 19:7-11). தினமும் வேதத்தை தியானித்து அதன்படி வாழ்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் கனி தரும் மரம்போல் நிலைத்து உறுதியோடும் இருப்பார்கள் (சங்கீதம் 1:1-3).
நேர்த்தியானது:
வேதாகமம் உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் சொல்லாது. ஆனால் அது கொடுக்கும் அறிவு முழுமையானது; வாழ்க்கைக்கும், தேவனுக்கேற்ப வாழ்வதற்கும் உதவுகிறது (2 பேதுரு 1:3). தேவனுடைய வார்த்தை மனிதனை புதிய முறையில் உயிர்ப்பிக்கிறது, பாவங்களை மன்னித்து, தேவனுடன் நல்ல ஒப்புரவாகி உறவு ஏற்படுத்த உதவி செய்கிறது.
நிச்சயமானது:
தேவனுடைய வார்த்தை நிச்சயமானது, நம்பத்தகுந்தது, உறுதியானது மற்றும் ஒரே மாதிரியாக நிலைத்திருக்கும். அவர் வார்த்தை பரலோகத்தில் என்றென்றும் உறுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 119:89). அறிவுள்ள மனுஷன் தன் வீட்டை கட்டக்கூடிய கற்பாறை அந்த வார்த்தையே (மத்தேயு 7:24-27). எளியவர்களும் அறியாதவர்களும் தேவனுடைய வார்த்தையை ஆராய்வதன்மூலம் ஞானமுடையவர்களாகிறார்கள்.
சரியானது:
தேவனுடைய வார்த்தை நெறிகளிலும், நடைமுறையிலும், உலகமெங்கும் நேர்த்தியானதும் சரியானதும் ஆகும். ஏனெனில் அது பரிசுத்த தேவனின் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாதலால், அது சரியானதாக இருக்கிறது. "நேர்மை" என்பதற்கான அர்த்தம், வளைந்து போகாமல் நேராகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்பதாகும். இதற்கு எதிரானது கோணலான எண்ணங்களும், தவறான நடத்தையுமாகும். தேவனுடைய வார்த்தை அதை வாசிக்கும், சத்தியத்தை ஏற்கும் மற்றும் தேவனுடன் உறவு வைத்திருக்கும் மக்களுக்கு சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தருகிறது.
தூய்மையானது:
தேவனுடைய வார்த்தை பரிசுத்தமும் உண்மையானதும் ஆகும். அது வாசிக்கும் மக்களுக்கு வெளிச்சம் அளிக்கிறது. அது சிதைந்து திரிக்கப்படாததால், ஒருவரையும் பாவத்திற்கு அழைத்துச் செல்லாது (2 பேதுரு 3:16). சாத்தான் மனிதரின் கண்களை குருடாக்கி விட்டான்; ஆண்டவர் அந்த கண்களைத் திறக்கிறார் (2 கொரிந்தியர் 4:4). ஆவிக்குரிய இருளால் நிரப்பப்பட்ட உலகத்தில், தேவவார்த்தை மகிழ்ச்சியும், ஆறுதலும், நம்பிக்கையும் தருகிறது.
சுத்தமானது:
தாவீது, தேவனுடைய வார்த்தையை “கர்த்தருக்குப் பயம்” என்று அழைக்கிறார். ஏனெனில், அது தேவனுடைய மகத்துவம், மகிமை, மாட்சிமை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தையாதலால், அந்த வார்த்தைகளும் நித்தியமானவையாகும்.
சத்தியமானது:
தேவன் சத்தியமானவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சத்தியமாயிருக்கிறார், அவருடைய வார்த்தையும் சத்தியமே. ஆகையால், மக்கள் அதை வாசிக்க வேண்டும், ஆராய வேண்டும், நேசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும் மற்றும் அதன்படி வாழ வேண்டும்.
நீதியானது:
பரிசுத்த தேவன் நீதிமானானவர். அவர் நியாயமான தேவன். தேவனுடைய நீதியான எதிர்பார்ப்புகளை, தேவைகளை மற்றும் கட்டளைகளை அறிய, மக்கள் வேதாகமத்தைப் பயில வேண்டும். அப்போதுதான், தேவனுடைய ஜனங்கள், அவரது நாமத்திற்காக நீதியின் பாதையில் நடக்க முடியும் (சங்கீதம் 23:3).
நான் வேதாகமத்தில், தேவ வார்த்தையில் மகிழ்ச்சியடைகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran