ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, மீதமுள்ளவற்றைச் சேகரிக்கும்படி கர்த்தர் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (யோவான் 6:12). அது அவருடைய சீஷர்களுக்கு விசுவாசம், பொறுப்புணர்வு மற்றும் தேவனுடைய அற்புதமான, ஏராளமான ஏற்பாடு ஆகியவற்றைப் பற்றிய ஒரு பாடமாக இருந்தது. அந்த வசனத்தின் மூலம் தேவன் ஒரு வாலிபனிடம் பேசினார். தெருக்களில் காணாமல் போனவர்கள், கடைசியானவர்கள், எளியவர்கள், ஏங்குகிறவர்கள் மற்றும் அலைந்து திரிகிறவர்களைத் தேடிச் செல்லும்படி கர்த்தர் அவனுக்கு உணர்த்தினார். அவனுடைய கீழ்ப்படிதல், செழுமையான, நிலைத்திருக்கும் மற்றும் ஏராளமான அறுவடையைக் கொண்டுவந்தது. அதனால், முப்பது ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான மக்களுடன் ஒரு செழிப்பான சபை உருவானது. அங்கத்தினர்கள் செழிப்படைந்தவர்களாக மாறவில்லை, ஆனால் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், சமாதானத்துடனும், நீதியுடனும், வல்லமையான சாட்சியுடனும் வாழ்கிறார்கள்.
தொலைந்துபோனவர்கள் (Lost):
இவர்கள் தொலைந்த நாணயம் அல்லது தொலைந்த ஆடு போன்றவர்கள். இவர்களைத் தேடி யாராவது முன்வர வேண்டும். பல நேரங்களில் அவர்கள் மக்களோடு கலந்துரையாடாமல் தனிமையில் வாழ்வதால், சபைகளிலிருந்தும் விலகி இருப்பார்கள். தொலைந்த நாணயத்தைத் தேடிய பெண்ணைப் போலவும், காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கப் புறப்பட்ட மேய்ப்பனைப் போலவும், நாம் அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.
கடைசியில் இருப்பவர்கள் (Last):
ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் முன், இயேசு மக்களை ஐம்பது மற்றும் நூறு பேர் கொண்ட குழுக்களாக அமரச் செய்தார் உணவும் மீனும் கூட்டத்தின் கடைசி நபர்வரை சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். அதுபோல, சுவிசேஷமும் இன்னும் அடித்தளம் போடப்படாத இடங்களுக்கும், சென்றடையாத மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் (ரோமர் 15:20-21).
சிறியவர்களாகக் கருதப்படுபவர்கள் (Least):
சமூகத்தில் சிலர் மதிப்பற்றவர்களாகவும் கவனத்திற்குத் தகுதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உயர்ந்தவர்களின் அலட்சியத்தால் அவர்கள் அழிந்து போகிறார்கள். ஆனால், உலகம் பலவீனமானவர்கள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும் எண்ணுபவர்களையே தேவன் தேர்ந்தெடுக்கிறார் (1 கொரிந்தியர் 1:27). சுவிசேஷம் இவர்களுக்காகவும் உள்ளது.
ஏக்கமுள்ளவர்கள் (Longing):
கெட்டுப்போன மகன் தன் தந்தையின் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று ஏங்கினான் (லூக்கா 15:17-20). தேவனை விட்டு தொலைவில் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் உள்ளார்ந்த ஒரு ஏக்கம் இருக்கிறது. ஆனால், திரும்பிச் செல்ல ஒரு தந்தையின் வீடு இருப்பதையும், அவர்களுக்காகக் காத்திருக்கும் அன்பான பிதா இருப்பதையும் அவர்கள் அறியாமல் இருக்கலாம். உண்மையை அறிந்திருந்தும் முழுமையாக கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்களிடமும் இந்த ஏக்கம் காணப்படுகிறது.
இலக்கில்லாமல் அலைந்து திரிபவர்கள் (Loitering):
இன்று பலர் தெருக்களிலும் சந்தைகளிலும் வணிக வளாகங்களிலும் நேரத்தை வீணடித்து அலைகின்றனர். அவர்கள் அதை மகிழ்ச்சியாக வாழ்வதாகக் கூறினாலும், உண்மையில் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மதுவுக்கு அடிமையாகிறார்கள்; சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள்; மற்றவர்கள் அசுத்த பழக்கங்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் கிறிஸ்துவின் அன்பும் இரட்சிப்பும் தேவை.
ஆண்டவர் இயேசு கட்டளையிட்டபடி, “மீதமுள்ளவர்களைச் சேகரிக்கும்” பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran