காட்சிக்காக மட்டும்

மாம்பழத் திருவிழா நடைபெற்றது. நாட்டின் பல பண்ணைகளில் இருந்து வந்த பலவகை மாம்பழங்கள் லக்னோ நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  அறிவிப்பு பலகைகளை பொருட்படுத்தாமல், மக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை பறித்துக்கொண்டு வெளியேறும் வழிகளுக்கு விரைந்தனர். கோடைக்காலப் பழங்களின் கொண்டாட்டம் இனிமையாக அமைவதற்கு பதிலாக கசப்பான முடிவை கண்டது. குடிமை உணர்வு குறைவும், கூட்ட நிர்வாகத்தின் தவறும் இந்தக் குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது (இந்தியா டுடே, ஜூலை 8, 2025).

ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாத மனம்:
தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்து, அவர்களை அழகான ஏதேன் தோட்டத்தில் வைத்தார். “தேவனாகிய கர்த்தர்  மனுஷனுக்குக் கட்டளையிட்டார்; ‘தோட்டத்திலுள்ள எல்லா மரங்களின் கனியையும் நீ விரும்பினபடியே சாப்பிடலாம்; ஆனால் நன்மை தீமையறிந்த மரத்தின் கனியை நீ சாப்பிடக்கூடாது; அதை சாப்பிட்ட நாளிலே நீ நிச்சயமாக மரித்துபோவாய்’ என்று கூறினார்” (ஆதியாகமம் 2:16-17). தடை செய்யப்பட்ட கனிகள் காட்சிக்காக இருந்தது, சாப்பிடுவதற்கல்ல. ஆனால் சாத்தானின் வஞ்சகத்தால் கவரப்பட்டு, முதல் மனித தம்பதிகள் அதைக் சாப்பிடத் தீர்மானித்தனர். இதுவே மனித குலத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

கட்டளைகளைக் கண்டுகொள்ளாத மனம்:
மனிதனின் இயல்பு, தேவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதே. ஆதாமும் ஏவாளும் தேவனின் கட்டளையை மீறியதைப் போலவே, மாம்பழத் திருவிழாவிலும் பங்கேற்றவர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை. பலகைகளில் “மாம்பழங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே, தொடவோ சாப்பிடவோ கூடாது” என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. பொது அறிவிப்புகளும் ஒலிபெருக்கி மூலம் கூறப்பட்டன. ஆனாலும், மக்கள் பறித்துக் கொள்ளவும், கவரவும், திருடவும், ஓடிப்போகவும் தேர்ந்தெடுத்தனர்.

மற்றவர்களைப் பொருட்படுத்தாத மனம்:
“பூமியும் அதில் உள்ள எல்லாம் கர்த்தருக்கே உரியது” (சங்கீதம் 24:1). இந்த உலகில் காணப்படும் அனைத்தும் அவருடையது. மனிதர் அனைவரும் இவ்வுலகில் தற்காலிக வாசிகள் மட்டுமே. “நாம் உலகத்தில் எதையும் கொண்டு வரவில்லை; எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது” என்று பவுல் எழுதுகிறார் (1 தீமோத்தேயு 6:7). சட்டப்படி பரம்பரையாகக் கிடைக்காதது, பரிசாகப் பெறப்படாதது, அல்லது உழைப்பால் சம்பாதிக்கப்படாதது இவையெல்லாம் தேவனிடமிருந்தும், பிறரிடமிருந்தும் திருடப்பட்டதாகவே கருதப்படுகின்றன. இந்த உண்மையை அறியாமலே, மக்கள் கண்காட்சியில் இருந்து திருடிக் கொண்டிருந்தனர்.

குடிமை உணர்வின்மையைப் பொருட்படுத்தாத மனம்:
பொது இடங்களில், ஒவ்வொருவரும் பிறரிடம் மரியாதையுடன் நடந்து, அனைவரின் நலனுக்காக அமைக்கப்பட்ட பொதுநெறிகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் சுயநலமும் ஒழுக்கமின்மையும் நிறைந்த சமுதாயத்தில், குடிமை உணர்வும் ஒழுங்கான நடத்தை உணர்வும் இல்லாதபோது குழப்பமும், சில நேரங்களில் நெரிசலால் உயிரிழப்பும் ஏற்படும்.

நான் தேவனின் கட்டளைகளை வாசித்து, புரிந்து, அவற்றைப் பின்பற்றுகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran