கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பரலோகம் என்ற நித்திய இலக்கை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் ஆகும். அந்தப் பயணத்தின் சாராம்சம் சங்கீதங்களில் விளக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 84:5-7).
ஆசீர்வதிக்கப்பட்டவர்:
கர்த்தரிடத்தில் பலம் பெறுகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, இரட்சிப்பின் சந்தோஷம் நிலைத்திருக்கும் (சங்கீதம் 51:12). உலகிலிருந்து அவர் பலம் பெறுவதில்லை. அந்தப் பலம் கர்த்தருக்கான அன்பிலும், அவர் வாசஸ்தலத்திலும் வேரூன்றியிருக்கிறது. கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பதே (கர்த்தரின் சந்தோஷமே) சீஷர்களின் பலமாக இருக்கிறது (நெகேமியா 8:10).
பயணம்:
ஆசீர்வதிக்கப்பட்டவர் வாழ்க்கையை தேவனுடைய நித்திய வாசஸ்தலத்தை நோக்கிச் செல்லும் ஒரு யாத்திரையாகக் காண்கிறார். ஒரு சீஷன் தன்னைப் பயணி, யாத்ரீகன், வழிப்போக்கன் அல்லது தற்காலிக வாசஸ்தலத்தில் இருக்கும் ஒருவனாகவே கருதுகிறான். எல்லோரும் இந்த உலகத்தில் ஒன்றுமின்றி வருகிறார்கள்; எதையும் எடுத்துச் செல்ல முடியாது (1 தீமோத்தேயு 6:7).
அழுகையின் பள்ளத்தாக்கு:
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் கடக்கவேண்டும். ஆனால், மரண நிழல் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், கர்த்தர் தம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு (சங்கீதம் 23:4). பாக்கா பள்ளத்தாக்கு என்பது அழுகை, கதறல், இரங்கல் என்று பொருள் தருகிறது. அது வறட்சியையும், பஞ்சத்தையும் குறிக்கிறது. ஆம், பயணத்தில் கடினமான கட்டங்கள் இருக்கின்றன.
நீரூற்று மற்றும் மழை:
கர்த்தரின் பலத்தாலும், விசுவாசியின் ஆவிக்குரிய வளர்ச்சியாலும், ஆபத்தானதும், கடினமானதுமான இடங்கள் ஆசீர்வாதம், வளமை, நிறைவு ஆகியவற்றின் இடங்களாக மாறுகின்றன. அழுகையின் பள்ளத்தாக்கிலே அமைதியூட்டும், புத்துணர்ச்சி தரும் நீரோடைகள் பாய்கின்றன.
பலத்திலிருந்து பலம்:
ஆசீர்வதிக்கப்பட்ட விசுவாசி, நீரின் நிறைவோடு, பலத்திலிருந்து பலத்திற்கு சென்று, பலவீனமடைவதில்லை. அவர் சோர்வடையாமல், களைப்படையாமல், பயணத்தைத் தொடர்கிறார். தேவன் கிருபைக்கு கிருபையைச் சேர்க்கிறார், பலத்திற்கு பலம், அன்பிற்கு அன்பைச் சேர்க்கிறார்; அதனால் அந்தப் பயணம் நினைவில் நிற்கக்கூடியதாகவும், விலைமதிப்பானதாகவும் அமைகிறது.
கர்த்தருக்கு முன் தோன்றுதல்:
கர்த்தரின் சந்நிதியில் தோன்றி நித்திய ஓய்வை அடைவதற்காக, அவர்கள் நம்பிக்கையோடு அந்தப் பயணத்தைத் தொடர்கிறார்கள்; சிலர் அந்த நித்திய ஓய்வை மற்றவர்களை விட முன்னதாக அடைகிறார்கள். மரணம் என்பது பரலோக வாசல்களில் நுழையும் கதவாகும். ஆகையால் பரிசுத்தவான்களின் மரணம் விலைமதிப்பானது; அவர்கள் அவரது சந்நிதியில் பிரவேசிக்கிறார்கள் (சங்கீதம் 116:15).
நான் என் பரலோகப் பயணத்தில் சந்தோஷமுள்ள, பலமுள்ள யாத்ரீகனாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran