வயதான செயல்முறைக்கு எதிராகப் போராடுதல்

தொழில்நுட்ப அதிபரான பிரையன் ஜான்சன், நவீன அழியாமை இயக்கத்தின் முன்னோடியாக விளங்குகிறார். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் அமெரிக்க டாலர்களை தனது உடலை மீண்டும் இளமையாக்கும் முயற்சிக்காக செலவழிக்கிறார். அதில், தனது மகனின் இளமையான இரத்தத்தை தன்னிடம் மாற்றி எடுத்துக்கொள்வதும், முழுமையான பிளாஸ்மா மாற்றும் சிகிச்சையையும் மேற்கொள்வதும் அடங்கும். காலங்காலமாக உயிரோடு வாழ வேண்டும் (சாவாமை) என்ற இலக்குக்காக அவர் செய்த முயற்சிகளில் செலவுக்கும், செய்திகளுக்கும் அவர் பின்னடையவே இல்லை. ஆனால், 46 வயதான அவர், தாமாகவே ஒப்புக்கொள்கிறார்;  தனது வயதைக் குறைப்பதற்காக அவசரமாக முயற்சி செய்ததனால், அது வேகமாக முதுமையை தந்திருக்கலாம். ஆம், வேதாகமம் இப்படியாக சொல்கிறது? உங்களுள் யார் தனது சிந்தையால் ஒரு நிமிடமாவது தன் ஆயுளில் கூட்ட முடியும் (மத்தேயு 6:27). கவலைப்படுவதாலும், எச்சரிக்கையாக வாழ்வதாலும், சிறப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் கூட ஒருவரது வாழ்நாளில் ஒரு நிமிடம்கூட கூட்ட முடியாது.

ஜீவனின் ஆண்டவர்: 
தேவன் ஆதாமை உருவாக்கி, அவனுள் தன் மூச்சை ஊதினார்; அதனால் மனிதன் உயிர் பெற்றான் (ஆதியாகமம் 2:7). மனித உயிரின் ஒரே மூலமும் தேவனே. அவரே மனிதனை உருவாக்கியவரும் படைத்தவரும் ஆவார் (சங்கீதம் 100:3).

வரையறுக்கப்பட்ட வாழ்வு:
நித்திய வாழ்வு என்பது மனிதரின் ஒருங்கிணைந்த ஆவல். பெரும்பாலானோர்கள் மரணத்தை விரும்பவில்லை; இந்த உலகில் வாழ்ந்து இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த பூமியில் மனிதனின் வாழ்நாளை தேவனே தீர்மானித்துள்ளார். அவர் மாதங்களின் எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கிறார்; அதை மீற முடியாது (யோபு 14:5). ஜீவனை அருளும் தேவன், அதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அளிக்கிறார். ஆனால், அந்த நோக்கத்தை அறிந்து வாழ்வதற்குப் பதிலாக, பலர் வாழ்நாளை நீட்டிக்க முயன்று தங்களது நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்.

நீட்டிக்கப்பட்ட வாழ்வு:
தனது வாழ்நாட்களை அறிந்து வாழ்க்கையை பொருட்பூர்வமாக அல்லது நோக்கமறிந்து வாழ தேவன் கற்றுக்கொடுக்க வேண்டும் என மோசே வேண்டினார். இது கணிதக் கணக்கல்ல; நாட்கள் வீணாகாமல் பயனுள்ள வாழ்க்கையை நடத்தும் ஞானம். சில முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் வாழ முடியும் என அவர் குறிப்பிடுகிறார். ஒருவேளை நூற்றிருபது ஆண்டுகள் வாழ்ந்தாலும், அது கூட துக்கமும் வேதனையும் தான் (சங்கீதம் 90:10; உற்பத்தி 6:3).

நோக்கமுள்ள வாழ்வு: 
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு திட்டத்தையும் நோக்கத்தையும் வைத்திருக்கிறார் (எரேமியா 29:11). அந்த தேவனுடைய சித்தத்தைக் கண்டறிந்து அதன்படி நடப்பவர்கள், தேவன் நிர்ணயித்த காலவரம்புக்குள் அமைதியானதும், முன்னேற்றமுள்ளதும், பயனுள்ளதும் ஆன வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

என் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நான் பகுந்தறிந்துள்ளேனா?

Rev. Dr. J.N. Manokaran