கேட்பதன் மூலம் வரும் விசுவாசம்

ஒரு மேற்கோள் பலமுறை பயன்படுத்தப்படுகிறது; அதாவது எல்லா நேரங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு தவறான சொல்வழக்கு எனலாம். இருப்பினும், இது பல கிறிஸ்தவர்களால் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது. துன்புறுத்தல் அதிகரிக்கும் போது இதை அடிக்கடி மேற்கோள் காட்டும் போக்கு உள்ளது. இருப்பினும், ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இவ்வாறாக குறிப்பிடுகிறார்; “மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும்.  ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” என்று எழுதப்பட்டிருக்கிறது. நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?” என்று கேட்கிறார். எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்” (ரோமர் 10:14-17).

அனுப்புதல்: 
நற்செய்தியின் தூதர்கள் அனுப்பப்பட வேண்டும்.  அனைத்து விசுவாசிகளையும் சுவிசேஷகர்களாகப் பயிற்றுவிக்கும் பொறுப்பு உள்ளூர் சபைகளுக்கு உள்ளது.  அவர்களில் சிலர் திருச்சபையின் அருகாமையில் பணிபுரிவார்கள், மற்றவர்கள் தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள். 

பிரசங்கித்தல்: 
அனுப்பப்படுபவர்கள் ஒரு நோக்கத்துடன் அனுப்பப்படுகிறார்கள்.  அதாவது நற்செய்தியைப் பிரசங்கிக்க, அறிவிக்க மற்றும் பிரச்சாரம் செய்ய அனுப்பப்படுகிறார்கள்.  அவர்கள் அமைதியாக இருக்கவோ, ஒருசில நல்ல செயல்களைச் செய்யவோ மாத்திரம் அனுப்பப்படவில்லை.  தேவ ஆவியால் வழிநடத்தப்படுவதால், அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து கற்பிக்க வேண்டும். 

கேட்டல்:
யாராவது பிரசங்கித்தால் மட்டுமே, மக்கள் கேட்க முடியும்.  அவர்கள் நற்செயல்களை மட்டும் செய்தால், எத்தனை பேர் அதைக் கண்டு அல்லது அதனைக் குறித்து சிந்தித்து;  அவர்கள் ஏன் நல்ல செயல்களைச் செய்கிறார்கள் என்று விசாரிக்க முடியும். ஒருவேளை பெரும்பான்மையானவர்கள் தங்கள் செயல்களைப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது விளக்கவோ முடியாமலும் போகலாம்.  இதற்கிடையில், நற்செய்தியின் எதிரிகள் மக்களிடையே பகைமையைப் பரப்புவார்கள்.  நற்செய்தியைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார்.

நம்பிக்கை:  
அவர்கள் கேட்கும்போது, ​​கேட்பவர்களின் இதயங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி கர்த்தர் திறப்பார்.  அப்படி கேட்பவர்கள் கர்த்தரை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கலாம். 

மக்களிடையே விசுவாசத்தை ஏற்படுத்துவதற்கான நற்செய்தியை நான் பிரசங்கிக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran