தோல்வியடைந்த கனவுகள்

சிலர் மனிதரின் கனவுலகத்தை மிகுந்த ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும், பெரிய ஆபத்துகளையும் ஏற்றுக்கொண்டு துரத்திச் செல்கிறார்கள்.
ஒருவருக்கு மேற்கு நாடுகளில் உள்ள ஒரு செழிப்பான நாடே தனது “கனவுநாடு” ஆக இருந்தது. தேவன் அவரை தனது சொந்த நாட்டில் ஒரு மேய்ப்பராக அழைத்திருந்தபோதிலும், அவர் வெளிநாட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று விரும்பினார். பல ஆண்டுகள் முயன்றும் முடியவில்லை. பின்னர் சட்டவிரோதமான “டாங்கி ரூட்” எனப்படும் வழியில் அவர் அந்த நாட்டை அடைந்தார். அது ஆபத்துகள் நிறைந்த பயணம் — நீண்ட நடைபயணங்கள், லாரி பயணங்கள், படகு பயணங்கள், சரக்கு பெட்டிகளில் மறைந்து செல்லுதல் போன்றவை.
ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும், பின்னர் வாழ்க்கையை சமாளிக்கக் கற்றுக்கொண்டு, ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வளர்ச்சி அடைந்தார். ஆனால் உள்ளத்தின் குற்ற உணர்வு, தனிமை, தேவனுக்குப் பயனற்ற வாழ்க்கை வாழ்கிறேன் என்ற வெறுமை ஆகியவை அவரை மதுவுக்கு அடிமையாக்கின. இறுதியில் தற்கொலை முயற்சியிலும் அவர் இறங்கினார். அவர் கற்பனை செய்த கனவு நிறைவேறியிருந்தாலும், அது அவரது வாழ்க்கையையே தோற்கடித்துவிட்டது.

தேவன் கொடுக்கும் கனவுகள்: யோசேப்புக்குக் கிடைத்த கனவுகள் தேவனிடமிருந்து கிடைத்த ஒரு வெளிப்பாடாக இருந்தன (ஆதியாகமம் 37:5-11). இருப்பினும், பல கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த கற்பனையையும், நான்காம் பரிமாணத்தில் பார்ப்பதையும் தேவன் கொடுத்த ஒரு கனவு என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில், அவை ஆபத்தான மாயத்தோற்றங்களாக இருக்கலாம்.

தரிசனம்: 
தேவனுடைய மக்கள், தேவனால் அளிக்கப்படும் தரிசனத்தைப் பெற வேண்டும். ஏசாயா வானம் திறக்கப்பட்டதை கண்டார் (ஏசாயா 6). அதேபோல், இதுவரை யாரும் செல்லாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற தரிசனத்தை பவுல் பெற்றிருந்தார்.
(ரோமர் 15:20).

அர்த்தமுள்ள வாழ்க்கை: 
தேவனை அறிந்து, அவரை நேசித்து, அவருக்கு  ஊழியம் செய்து, அவரை மகிமைப்படுத்துவதற்காகவே தேவன் மனிதனுக்கு வாழ்க்கையை அளித்துள்ளார். நாடுகளை மாற்றுவது, சூழ்நிலைகளை மாற்றுவது அல்லது வசதிகளை அடைவது மட்டுமே வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தராது. ஒருவர் தேவனை அறியாவிட்டால், வாழ்க்கை என்பது வெறும் உயிர்வாழ்தலும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதுமாகிவிடும். சில பணக்காரர்களுக்கு உலகத்தில் தற்காலிக மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் உண்மையான சந்தோஷம், திருப்தி, சமாதானம் ஆகியவை தேவனில் மட்டுமே கிடைக்கும்.

நோக்கமுள்ள வாழ்க்கை: 
ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மகத்தான நோக்கத்தை வைத்திருக்கிறார்.
நீரோடைகளருகே நட்டப்பட்டு கனிகொடுக்கும் மரம்போல் அவர்கள் இருக்க வேண்டும் என்பது தேவனின் திட்டம் (சங்கீதம் 1:1-3). ஒரு மனிதன் எங்கு “நாட்டப்பட வேண்டும்” என்பதை தேவன் துல்லியமாக அறிந்திருக்கிறார். தேவ ராஜ்யத்திற்கு பயனுள்ளவராக இருக்கும்படி அவர் ஒவ்வொருவரையும் அமைக்கிறார்.
யோசேப்பைப் போல, சிலரை தேவன் வேறு தேசங்களுக்கு அழைத்து சென்று, பலருக்கு ஆசீர்வாதமாகவும் உயிர்களை காக்கிறவர்களாகவும் பயன்படுத்தலாம். யோசேப்பு தனது பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை; தேவனே அதைத் தேர்ந்தெடுத்தார்.
நீதிமானின் வழியை கர்த்தர் அறிந்தும் காத்தும் வருகிறார்
(சங்கீதம் 1:6).

நான் தேவனால் அருளப்பட்ட தரிசனத்தைத் தேடுகிறேனா? அல்லது வெறும் கற்பனையான கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran