இறந்த அனைவரும் பரலோகத்திற்குச் செல்கிறார்களா

ஒரு பிரசங்கியார் ஒருநாள் சில இளைஞர்களிடம்; “நாம் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். அப்படி கேட்டதும் அங்கு ஓர் அமைதி ஏற்பட்டது. சில நேரங்களுக்குப் பிறகு, ஒரு சிறுவன் எழுந்து நின்று; “பரலோகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், முதலில் இறக்கவேண்டும்” என்று சொன்னான். அந்த பதில் கேட்டதும், பிரசங்கியார் சில நொடிகள் மௌனமாக நின்றார். சிறுவன் கூறியது உண்மையே,  இறப்பு இல்லாமல் ஒருவர் சொர்க்கத்திற்கு எப்படிச் செல்ல முடியும்? பொதுவாக, எல்லா மதத்தினரும் ஒரு நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள்; ஒருவர் இறந்தால், அவர் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார் என நம்புகிறார்கள்.

மரணம்: 
ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்ல உடல் இறப்பு மட்டும் போதாது. அது இம்மை வாழ்வின் முடிவை குறிக்கிறது. ஆனால், ஆத்துமா சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்கிறது. இரட்சிப்பை அறியாமல் இறப்பவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள். சரீர மரணம் இறந்தவர்களை உயிருள்ளவர்களிடமிருந்து பிரிக்கிறது. எனவே, சடலம் தகனம் செய்யப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. ஆவிக்குரிய மரணம் அல்லது இரண்டாம் மரணம், ஜீவனுள்ள தேவனிடமிருந்தும் வாழ்ந்த உலகத்திலிருந்தும் பிரிவை ஏற்படுத்தி, ஆவியை அக்கினிக்கடலில் வீசுகிறது (வெளிப்படுத்துதல். 21:8).

பாவத்திற்கு மரித்தல்:
அந்த இளைஞன் கூறியது ஒரு வகையில் உண்மையே,  பாவத்திற்கு மரித்தவர்கள் தான் சொர்க்கத்திற்கு செல்லத் தகுதியுடையவர்கள் (ரோமர் 6:11). பழைய மனிதர், அதாவது ஆதாமின் இயல்பு, இறந்ததாக எண்ணவும், நம்பவும், விசுவாசத்தோடு கருதவும் வேண்டும் என்று பவுல் எழுதுகிறார். அதேபோல், ஒரு விசுவாசியும் கிறிஸ்துவில் உயிருடன் இருப்பவர்களாக நம்ப வேண்டும், விசுவாசிக்க வேண்டும். ஒருவர் இறந்திருந்தால் அவர் பாவம் செய்ய முடியாது. அதுபோல், பாவிக்குணம் இறந்ததாக கருதப்படும் உள்மனிதனையும் பாவம் சோதிக்க முடியாது.

பிரமாணத்திற்கு மரித்தல்:
பவுல் மேலும் கூறுகிறார்; தாம் தம்மை நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவராக கருதுகிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், நியாயப்பிரமாணம் அவரைக் “கொன்றது” என்கிறார். அவர் மட்டுமல்ல, எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, விசுவாசிகளும் அவருடன் உயிர்த்தெழுந்தார்கள். “நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்வு எனக்கானது அல்ல. இயேசு கிறிஸ்து இப்போது என்னில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த சரீரத்திலே நான் வாழ்ந்தாலும் தேவனுடைய குமாரன் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். இயேசு ஒருவரே என்மீது அன்பு கொண்டவர். என்னை இரட்சிப்பதற்காக அவர் தன்னையே தந்தவர்” என்ற எண்ணத்தோடு விசுவாசத்தோடு வாழ்வது போல விசுவாசிகளும் அதைப் போலவே வாழவேண்டும் (கலாத்தியர் 2:20) என வலியுறுத்துகிறார்.

உலகத்திற்கு மரித்தல்:
தாம் உலகத்திற்கு மரித்தவர் என்றும், உலகம் தன்ன்மேல் அதிகாரம் இழந்துவிட்டது என்றும் (கலாத்தியர் 6:14) பவுல் எழுதுகிறார். ஒவ்வொரு விசுவாசியும், கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டவனாக, உலகத்தின் ஆசைகள், இச்சைகள், புகழ், செல்வம் போன்றவை மீது ஈடுபாடில்லாமல், அவற்றிற்கு இறந்தவராக வாழலாம். இவ்வாறு வாழும் விசுவாசி, கிறிஸ்துவில் உறுதியாகவும், உலகத்தினால் அசைக்க முடியாதவனாகவும் இருக்க முடியும்.

பரலோகத்திற்குச் செல்ல நான் கிறிஸ்துவிற்குள் ஜீவனோடு இருக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran