சிதைந்த நேர்மை

அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல். லாபியில் யாரோ ஒருவர் அதிக பணம் உள்ள பணப்பையை விட்டுச் சென்றிருந்தார். ஒரு தம்பதியினர் அதை எடுத்துக் கொண்டு மேலாளரிடம் ஒப்படைத்தனர். மேலாளர் அவர்களைப் பாராட்டி புகைப்படம் எடுத்து தங்களது இணையதளத்தில் வெளியிட விரும்பினார். ஆனால் அந்த தம்பதியினர் மறுத்தனர். அந்த ஆணும் பெண்ணும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்திருந்தனர்; மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருந்தனர். பணத்தில் நேர்மை இருந்தாலும், திருமண உடன்படிக்கையில் விசுவாசமின்மை இருந்தது. பிரமாணத்தின் ஒரு பகுதியில் தவறினாலும் முழுவதையும் மீறினவர்களாகக் கருதப்படுவார்கள் (யாக்கோபு 2:10).

தேர்ந்தெடுத்த நெறிமுறைகள்:
சிலர் சில விஷயங்களில் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்ற விரும்புகிறார்கள். உதாரணமாக, அந்த ஆணும் பெண்ணும் பண விஷயத்தில் நேர்மையாக இருந்தனர். ஆனால் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு விசுவாசமாக இல்லை. மற்ற சிலர் தங்கள் துணைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்; ஆனால் பண விஷயங்களில் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள். சில துறைகளில் நல்லவர்களாகவும் மற்ற துறைகளில் தீயவர்களாகவும் இருப்பது தேவனுக்குப் பொருந்தாது. சிலர் தங்கள் நல்ல செயல்கள் தீய செயல்களின் விளைவுகளை நீக்கிவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள்.

மனந்திரும்புதல்:
நாம் செய்த பாவங்களினிமித்தம் கல்வாரிச் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பும்படி கடவுள் அனைவரையும் அழைக்கிறார் (அப்போஸ்தலர் 17:30; யோவான் 1:12). அப்படிச் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்படுவார்கள்; பரிசுத்தமான வாழ்க்கையை நடத்த தெய்வீக வல்லமையும் பெறுவார்கள்.

பரிசுத்தமே இலக்கு:
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு உன்னதமான இலக்கு உண்டு. வேதாகமம் இவ்வாறு போதிக்கிறது: "நான் பரிசுத்தமாயிருக்கிறபடியால், நீங்களும் பரிசுத்தமாயிருங்கள்" (லேவியராகமம் 21:8; யாத்திராகமம் 19:6; 1 பேதுரு 1:16). சிருஷ்டிகராகிய கடவுள் பரிசுத்தமானவர். கடவுள் பரிசுத்தமானவர் என்று போதிக்கும் ஒரே நூல் வேதாகமம் மட்டுமே. மேலும், தேவன் தம் மக்களிடமிருந்து பரிசுத்தத்தையே எதிர்பார்க்கிறார்; அதையே கோருகிறார்; அதையே கட்டளையிடுகிறார். 

அவரைப் போல:
சீஷர்கள் அவருடைய இரண்டாம் வருகையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர் மீண்டும் வரும்போது, சீஷர்கள் அவரைப் போலவே இருப்பார்கள் (1 யோவான் 3:2). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மிகச்சிறந்த ஆளுமை ஆவார். அவர் பரிபூரணமானவர், மேன்மையானவர், பரிசுத்தமானவர், வைராக்கியம் மிக்கவர், ஈர்க்கும் வல்லமை கொண்டவர், அன்பானவர், தாழ்மையானவர், ஊக்கமளிப்பவர் மற்றும் கிருபை நிறைந்தவர். கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரைப் பின்பற்றவும், ஒவ்வொரு நாளும் அவரைப் போன்ற சாயலில் வளரவும் முயல்கிறார்கள்.

நான் பரிசுத்தத்தை நாடித் தேடுகிறேனா? அவரைப் போலவே மாற விரும்புகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran