ஒரு விமான நிலையத்தில் பணியாற்றும் ஒரு தூய்மைப் பணியாளர், தனது சிறப்பான பணிக்காக விருது பெற்றார். பல பயணிகள் அவரது பெயரை இந்த விருதிற்காக பரிந்துரை செய்திருந்தனர். அந்தப் பணியாளர் தினமும் நேரத்திற்கு வந்து, பணிநேரம் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட்டு, ஒப்படைக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், பிற குழு உறுப்பினர்கள் கவனிக்காமல் விட்ட இடங்களிலும் தன்னிச்சையாகச் சென்று பணியாற்றுவதாக மேலாளர் பாராட்டினார். வேதாகமம் சொல்லுகிறது: “நீங்கள் எதையும் செய்யும்போது, மனுஷருக்காக அல்ல, கர்த்தருக்காக செய்வதாக முழு மனதோடு செய்யுங்கள்”
(கொலோசெயர் 3:23–24). இந்த விமான நிலையத்தில் பணியாற்றிய அந்தப் பெண், கர்த்தருக்காகச் செய்வது எவ்வாறு என்பதை ஐந்து வழிகளில் எடுத்துக் காட்டுகிறார்.
நேரந்தவறாமை (Punctuality):
தேவன் எப்போதும் நேர்த்தியானவர். அவர் ஒருபோதும் தாமதிப்பதில்லை. உதாரணமாக, விசுவாசிகள் கூடும் ஒரு கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தொடங்கினால், அனைவரும் வராவிட்டாலும் கர்த்தர் அங்கே இருப்பார். நேரம் தேவன் கொடுத்த ஒரு வரம். அதைப் பொறுப்புடன் பயன்படுத்துகிற நல்ல உக்கிராணக்காரர்களாக நாம் இருக்க வேண்டும்.
சிரத்தை (Diligence):
உழைப்பில் தீவிரமுள்ளவர்கள் கௌரவமும் உயர்வும் பெறுவார்கள்.
“தன் வேலையில் சுறுசுறுப்பாய் இருக்கிறவனைப் பார்த்தால், அவன் நீசர்களுக்கு முன்பாக அல்ல, ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்”
(நீதிமொழிகள் 22:29). சாலொமோன் ராஜா, இளம் யெரொபெயாமில் இருந்த உழைப்பையும் திறமையையும் கவனித்து, அவனை யோசேப்பின் வீட்டின் மேலாளராக உயர்த்தினார் (1 இராஜாக்கள் 11:28).
பின்னர் அவன் வட ராஜ்யத்தின் ராஜாவாக ஆனாலும், அவன் கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தரும் அவனை விட்டு விலகினார்.
சிறப்புத்தன்மை அல்லது சிறந்த தரம் (Excellence):
சிலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச வேலை மட்டும் செய்வதில் திருப்தி அடைகிறார்கள்.
ஆனால் சிலர் தங்களிடம் எதிர்பார்க்கப்படுவதைக் கடந்தும் செயல்படுகிறார்கள். இதுவே சிறப்புத் தரம் கவனம், அறிவு, திறமை, அனுபவம் மற்றும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி சிறந்த பலனை அடைவது ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “இரண்டாம் மைல் நட” என்று சொல்லி, எதிர்பார்ப்பை மீறிச் செயல்படுவதின் முக்கியத்துவத்தை கற்றுத் தந்தார்.
மகிழ்ச்சியான மனப்பான்மை (Joyful Attitude):
சிலருக்கு வேலை என்பது கசப்பான பழத்தைச் சாப்பிடுவது போல இருக்கும். அதனால் அவர்கள் வேலை செய்யும் போது எரிச்சலான முகத்தோடும், முணுமுணுக்கும் மனநிலையோடும் இருப்பார்கள்.
அவர்கள் வேலை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், தவறான மனநிலை நல்ல பணியையும் நல்ல உறவுகளையும் கெடுக்கிறது. ஆனால் சீஷர்கள் குறித்து வேதாகமம் கூறுகிறது; “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷப்படுங்கள்” (பிலிப்பியர் 4:4). அந்த “எப்பொழுதும்” என்பது கடினமான உழைப்பு நிறைந்த காலங்களையும் உள்ளடக்கியதே.
முனைப்புத் தன்மை (Initiative):
தலைமைப் பண்புகளில் மிக முக்கியமான ஒன்றாக முனைப்புத் தன்மை இருக்கிறது அதாவது முன்முயற்சி எடுப்பதாகும். யாராவது கட்டளை கொடுப்பார்கள் என்று காத்திருக்காமல், உயர்ந்து வரும் தலைவர்கள் தாங்களே முன்வந்து, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, திறந்த கதவுகளில் நுழைகிறார்கள்.
நான் செய்கிற அனைத்திலும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தும், உழைப்புத் தீவிரமுள்ள அல்லது சிரத்தையுள்ள ஒரு கிறிஸ்துவின் சீஷனாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran