டிஜிட்டல் மூன்றாம் இடம்

நகர சமூகவியலாளர் ரே ஓல்டன்பர்க் (Ray Oldenburg) கூறுகிறார்; “மூன்றாம் இடம் என்பது வீடும் அல்ல, வேலை இடமும் அல்ல. அது மனிதர்களுக்கு அரவணைப்பு, நட்பு மற்றும் ‘சமூக’ உணர்வை வளர்க்கும் இடமாகும். வரலாற்றில் கஃபேக்கள், மதுக்கூடங்கள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள் போன்ற இடங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். பல்வேறு சமூக நிலைகளிலிருந்து வரும் மக்கள் இங்கு சுதந்திரமாகச் சந்தித்து உரையாடுவர்.” ஆனால் அவர் திருச்சபையை மூன்றாம் இடமாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சபையின் ஆரம்பம்:
ஆரம்பக் கால விசுவாசிகள் அப்போஸ்தலர்களின் போதனையை கேட்டும், ஜெபத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஐக்கியத்திலும் உறுதியாக இருந்தனர் (அப்போஸ்தலர் 2:42). அவர்கள் தங்கள் தினசரி பணிகளை முடித்த பின், பெரிய வீடுகளில் கூடினர். சில சமயங்களில் சாலமோனின் தாழ்வாரம் (Solomon's Porch) போன்ற பொதுஇடங்களிலும் ஒன்று சேர்ந்தனர் (அப்போஸ்தலர் 5:12).

திறன்னுவின் மண்டபம்: 
கி.பி. 55-ல், எபேசு நகரத்தில் இருந்த பொது மண்டபத்தைப் பவுல் பயன்படுத்திக் கொண்டு, கூடியிருந்தவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார்  (அப்போஸ்தலர் 19:9-10). இதனால், பொதுஇடங்களும் சுவிசேஷ அறிவிப்பிற்கான அரங்குகளாக மாறின.

வேதாகம வாசிப்பின் பரவல்:
ஐரோப்பிய மொழிகளில் வேதாகமம் அச்சிடப்பட்டபோது, குறிப்பாக King James Version வெளியானபின், மக்கள் மத்தியில் வேதாகம வாசிப்பு பரவலானது. அனைவராலும் தனிப்பட்ட வேதாகமம் வாங்க முடியாத காரணத்தால், திருச்சபைகள் போன்ற இடங்களில் வேதாகமம் வாசிக்கப்பட்டும் விளக்கப்பட்டும் வந்தது. பல நூற்றாண்டுகளாக, பல சமூகங்களில் திருச்சபை இயல்பாகவே “மூன்றாம் இடம்” என்ற நிலையை வகித்தது என ஜூரி கிரியேல் எழுதுகிறார்.

காபி கடைகள்:
1650களில் இங்கிலாந்தில் காபி கடைகள் தோன்றின. ஒரே சிந்தனை கொண்டவர்கள் சந்தித்து உரையாடும் இடங்களாக அவை விளங்கின. கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள் நடைபெற்றன. கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் இங்கு கூடினர்.

தொழில்துறை வளர்ச்சி:
தொழில்துறை வளர்ச்சியுடன், ஐரோப்பிய நகரங்களில் தொழிலாளர்கள் கூடும் இடங்கள் உருவாயின. இவை சமூக மற்றும் அரசியல் இயக்கங்களுக்கு அடித்தளமாயின. செல்வந்தர்கள் காபி கடைகளில் கூடினாலும், தொழிலாளர்கள் தொழிற்சங்க அலுவலகங்களில் ஒன்றுகூட்டப்பட்டனர்.

டிஜிட்டல் காலத்தின் மூன்றாம் இடம்:
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் புதிய “மூன்றாம் இடம்” ஆக மாறியுள்ளன. மக்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் இணையத்தில் இணைந்து; உரையாடுகின்றனர்,
கருத்துகளைப் பகிர்கின்றனர்,
காணொளிகளைப் பார்கின்றனர்,
செய்திகள் அறிகின்றனர்,
விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணையத்தில் செயலில் இருக்கின்றனர். இந்த டிஜிட்டல் உலகம் சுவிசேஷ அறிவிப்பிற்கும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதற்கும் புதிய வாயிலாக உள்ளது.

நான் இந்த டிஜிட்டல் மூன்றாம் இடத்தில், ஆண்டவரின் சாட்சியாக இருக்கிறேனா? என் வார்த்தைகள், பதிவுகள், மற்றும் பகிர்வுகள் கிறிஸ்துவின் சத்தியத்தையும் கிருபையையும் பிரதிபலிக்கிறதா?
 

Rev. Dr. J.N. Manokaran