செங்கடலைப் பிரித்ததை விவரித்தல்

தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். அவர்கள் செங்கடல் அருகே சென்றபோது, எகிப்திய இராணுவம் அவர்களை பின்தொடர்ந்தது. ஆனால், தேவன் ஒரு வழியை உருவாக்கினார்; செங்கடலைப் பிளந்து, இஸ்ரவேலர் அதை கடந்து நடக்கச் செய்தார். எகிப்தியர்கள் அதே வழியில் சென்றபோது, அவர்கள் செங்கடலில் மூழ்கி அழிந்துவிட்டனர் (யாத்திராகமம் 14:21–29). இதை மேலும் தெளிவாக ஆசாப் சொல்லுகிறார் (சங்கீதம் 77:16–20).

வரலாற்றுச் சான்றுகள்:
பழைய யூத வரலாற்றாசிரியரான ஜோசபஸ் இவ்வாறு பதிவு செய்கிறார்; "எகிப்து இராணுவமெல்லாம் அந்தப் பாதையில் நுழைந்தவுடன், கடல் தன் இயல்பான நிலைக்கு திரும்பியது. பலவந்தமான காற்றினால் தூண்டப்பட்ட மழைக்காற்று கடலை பெருவெள்ளத்துடன் கூடிய நீர்ப்பாய்ச்சலாக மாற்றியது, எகிப்தியர்களை சுற்றிக்கொண்டு மூழ்கடித்தது. வானிலிருந்து கனமழையும், பயங்கரமான இடியுடன் மின்னல்களும் விழுந்தன. தீக்கனலோடு கூடிய மின்னல் பாகுபாடுகள் எகிப்தியர்கள் மீது தாக்கின. தேவன் தனது கோபத்தின் அறிகுறியாக மனிதர்கள் மீது அனுப்பிய யாவும் அந்த நேரத்தில் நிகழ்ந்தது. ஒரு இருளும் பயங்கரமான இரவும் அவர்களை மூடினது. இதனால் அந்த மக்களில் ஒருவரும் மீதமில்லை; இந்தப் பேரழிவை மற்ற எகிப்தியரிடம் தெரிவிக்க கூட ஒருவரும் உயிருடன் தப்பியிருக்கவில்லை".

செங்கடல் அஞ்சியது:
செங்கடலின் நீர், தேவனின் பிரசன்னத்தைக் கண்டு பயந்ததாக ஆசாப் எழுதுகிறார். 

அம்புகள்:
கனமழை, மின்னல், இடியுடன் விழுந்த கல்லூட்டங்களையும் மின்னெழுச்சியையும் தேவனுடைய அம்புகளாக ஆசாப் விளக்குகிறார் (சங்கீதம் 77:17-18).

பூமி நடுங்கியது:
பூமி அதிர்ந்தது; அது ஒரு நிலநடுக்கமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது (சங்கீதம் 77:18).

கடலில் தேவனின் வழி: 
தண்ணீர், ஏரிகள், கடல்களின் மேல் தேவனுக்கு அதிகாரம் உண்டு. தேவன் அற்புதமாக செங்கடலைப் பிளந்தார்; மக்கள் செல்ல ஒரு தெளிந்த பாதையை உருவாக்கினார். ஆண்டவர் இயேசுவும் புயலை அமைதியாக்கி, இயற்கையின் மேல் தமது அதிகாரத்தை வெளிப்படுத்தினார் (மத்தேயு 8:23–27).

காணப்படாத கால்தடங்கள்: 
மகத்துவமுள்ள தேவன், ஒரு சிறுவன் சிறிய ஓடைகளில் நடப்பதுபோல், பெரும் கடல்களில் செல்வார். ஆனால், அவரது பாதச்சுவடுகள் காணப்படுவதில்லை (சங்கீதம் 77:19).

மேய்ப்பன்:
தம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து, செங்கடல் வழியாக வழிநடத்திய தேவன், ஒரு மேய்ப்பனாக தொடர்ந்து அவர்களை வழிநடத்தினார். மோசே மற்றும் ஆரோன் என்பவர்கள், தேவன் பயன்படுத்திய மனித வழிநடத்துனர்களாக (கருவிகளாக) இருந்தனர் (சங்கீதம் 77:20).

 அடிமைத்தனத்திலிருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மேய்ப்பனை நான் நம்புகிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran