இன்றைய உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கம், நிறுவனங்கள், வணிகம், விளையாட்டு, கல்வி, மருத்துவம், வங்கிச் சேவைகள், தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் எனப் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆழமாக ஊடுருவியுள்ளது. இருப்பினும், விளம்பரதாரர்கள் தங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்துவது, பொழுதுபோக்கு காணொளிகளைப் பரிந்துரைப்பது, எண்ணற்ற அறிவிப்புகளை அனுப்புவது எனத் தொடர்ந்து திறன்பேசி (Smartphone) பயன்படுத்துபவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அளவுக்கு அதிகமான தகவல்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன. திரைகளை நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பதும், அவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாவதும் உடல் சோர்வு, மன அழுத்தம், உணர்வுசார் பாதிப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதுவே டிஜிட்டல் களைப்பு (Digital Burnout) எனப்படுகிறது. கண்களில் எரிச்சல் அல்லது சோர்வு, சிந்தனையில் தெளிவின்மை, தூக்கமின்மை, பிறரிடமிருந்து விலகியிருக்கும் மனநிலை, உடல் களைப்பு மற்றும் செயல்திறன் குறைதல் போன்ற அறிகுறிகள் இதனால் ஏற்படலாம்.
தேவனுடைய மகிமையை நாடுதல்:
கர்த்தருடைய சீஷர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் (1 கொரிந்தியர் 10:31). திறன்பேசியை தேவனுடைய மகிமைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம்? கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்புள்ள உக்கிராணக்காரர்களாக இருக்கிறோமா? டிஜிட்டல் உள்ளடக்கங்களை வெறுமனே நுகர்பவர்களாக இருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தேவனுடைய மகிமைக்காக வேதாகம சத்தியங்களையும் தங்களுடைய விசுவாச அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் உள்ளடக்க உருவாக்குபவர்களாக மாற வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் முன்னுரிமை:
ஒவ்வொரு நாளும் தேவன் நமக்குக் கொடுக்கும் ஓர் ஈவாகும். விசுவாசியின் வாழ்க்கையில் தேவனுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுத்து, அதைக் கட்டியெழுப்பி, விரிவுபடுத்துவதே முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆனால், சமூக ஊடகங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு நமது கவனத்தைச் சிதறடித்து, தேவனுடைய சித்தத்தைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கும், நமது ஆவிக்குரிய இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கும் தடையாக அமையலாம். எனவே, நமது நேரத்தையும் கவனத்தையும் எதற்காகச் செலவிடுகிறோம் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அன்றாட பயன்பாட்டிற்கு வரம்பு:
சுயக்கட்டுப்பாடு கொண்ட கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர், பொழுதுபோக்கு செயலிகளைப் பார்ப்பதற்கும், எந்த நோக்கமும் இல்லாமல் திறன்பேசித் திரையைத் தொடர்ந்து உருட்டிப் பார்ப்பதற்கும் தினசரி நேர வரம்பை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
நமது நேரத்தை வீணாக்காமல், தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்தச் சுயக்கட்டுப்பாடு உதவும்.
இடையூறு செய்யாத நிலை (Do not disturb):
வேதாகமம் வாசிக்கும்போதும், ஜெபிக்கும்போதும், அர்த்தமுள்ள ஐக்கியத்தில் ஈடுபடும்போதும், திறன்பேசியில் தோன்றும் திடீர் செய்திகள், உடனடிச் செய்திகள் மற்றும் அறிவிப்புகள் நமது கவனத்தைத் திசைதிருப்புகின்றன.
இத்தகைய முக்கியமான நேரங்களில் திறன்பேசியை ‘இடையூறு செய்யாதே’ (Do Not Disturb) என்ற அமைப்பில் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேவனோடு செலவிடும் நேரத்தையும், பிறரோடு கொண்டிருக்கும் ஐக்கியத்தையும் இடையூறின்றிப் பாதுகாக்க முடியும்.
தொழில்நுட்பம் பயன்படுத்தக்கூடாத இடங்களைத் தீர்மானித்தல்:
டிஜிட்டல் தொழில்நுட்பம் நமது வீடு மற்றும் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, வீட்டிலோ அலுவலகத்திலோ திறன்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாத சில இடங்களைத் தீர்மானித்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, படுக்கையறையைத் தொழில்நுட்பப் பயன்பாடற்ற இடமாக மாற்றலாம். திறன்பேசியைப் படுக்கையறைக்குள் எடுத்துச் செல்லாமல் இருப்பதுடன், அதற்கான மின்னேற்றத்தையும் (Charging) வேறொரு அறையில் செய்வது சிறந்தது. இத்தகைய நடைமுறைகள் நல்ல தூக்கத்திற்கும், மன அமைதிக்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உதவும்.
டிஜிட்டல் உலகிலிருந்து விலகி இருத்தல்:
இணையத் தொடர்பின்றியும் பல நல்ல, பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய முடியும். வாசித்தல், விளையாட்டுகளில் ஈடுபடுதல், விருப்பமான பொழுதுபோக்குச் செயல்களில் பங்கேற்றல் போன்றவற்றின் மூலம் நமது நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். சில செயலிகளிலிருந்து விலகி இருப்பதும், குறிப்பிட்ட நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதும், பிற பயனுள்ள செயல்களில் ஈடுபடுவதும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். இதன் மூலம் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு கிடைப்பதுடன், தேவனோடும் குடும்பத்தினரோடும் பிறரோடும் செலவிடும் நேரத்தையும் மேம்படுத்த முடியும்.
நான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் களைப்பிற்கு ஆளாகிறேனா? அல்லது ஒளியின் பிள்ளையாகப் பிரகாசிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran