ஆபாச உள்ளடக்கத்தின் விளைவுகள்

மத்திய பிரதேசத்தின் போலீஸ் இயக்குநர் ஜெனரல் கைலாஷ் மாக்வானா கூறியதாவது; “போலீஸ் மட்டும் கற்பழிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது.  மொபைல் போன்கள் மற்றும் இணையத்தின் மூலம் முறையற்றப் படங்கள் (போர்னோகிராஃபி) கிடைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக்குறைவு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள் ஆசிரியர்களையும் குடும்ப உறுப்பினர்களின் கண்டிப்புகளையும் கேட்டுக் கொள்வார்கள், ஆனால் இன்று வீட்டில் ஒருவரையும் கண்காணிக்க முடியவில்லை, கண்டிக்கவும் முடியவில்லை. இப்போது எல்லா வரம்புகளும் உடைந்து வருகின்றன. இணையத்தில் அசிங்கமான உள்ளடக்கங்கள் பரிமாறப்படும் விதம், குழந்தைகளின் மனதை சிதைத்துவிடுகிறது”
 (NDTV, 29 ஜூன் 2025). 2024 ஆம் ஆண்டில் மாநிலத்தில் தினமும் 20 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனசு கெடுதல் அல்லது சீர்குலைந்த மனம்:
கண்கள் உலகிற்கான ஜன்னல்கள் ஆகும். கண்களின் வழியாக தீய, வேசித்தனமான, குற்றவியல் எண்ணங்கள் உட்பட பல விஷயங்கள் உள்ளே நுழைகின்றன. அதனால் வேதாகமம், கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை எனும் உலகின் கொள்கைகளை எச்சரிக்கிறது‌ (1 யோவான் 2:16). ஒருவன் உலகின் பாரம்பரியங்கள், போக்குகள், ஆடை அலங்காரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்றினால், மனம் கெடுகிறது. அதற்கு பதிலாக, மனம் தேவனுடைய வார்த்தையினால் புதுப்பிக்கப்பட வேண்டும் (ரோமர் 12:1-2).

கண்களோடு உடன்படிக்கை:
இயேசுவின் பரிசுத்த ஜனங்கள், யோபைப் போல, தங்கள் கண்களோடு உடன்படிக்கை செய்தார்கள். அவர்கள் ஒருபோதும் ஒரு பெண்ணை காமக்கண்ணோடு பார்க்காமல் இருக்கத் தீர்மானித்தார்கள் (யோபு 31:1). இன்று, தீயவர்களால் மொபைல் போன் திரைகளில் காட்டும் பெண்களும் ஆண்களும் நிர்வாணமாக உள்ள படங்களைப் பார்க்காதிருக்கத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது. விளம்பரங்களில் கூட இக்காலத்தில் வெட்கமும் ஒழுக்கமும் காணப்படுவதில்லை.

விபச்சாரம் என்ற சிந்தனை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்ததாவது; ஒருவன் ஒருபெண்ணைப் பாவ நோக்கத்தோடு பார்த்தாலே அவன் மனதிலேயே விபச்சாரம் செய்ததாகும் (மத்தேயு 5:28). உலகத்தால் ஒருவரின் உள்ளத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாது; எந்த மனிதப் போலீசாராலும் அதைப் புலனாய்வு செய்ய முடியாது; எந்த மனித நீதிமன்றமும் சாட்சியமின்மையால் தீர்ப்பு வழங்க முடியாது. ஆனால், தேவன் மனதில் உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் ஆராய்ந்து நியாயந்தீர்ப்பார் (நீதிமொழிகள் 21:2). போர்னோகிராஃபி என்பது சாத்தானின் வலை; இளைஞர்களை சிக்கவைத்து அழிக்கிறதற்கு அது பயன்படுத்தப்படுகிறது. பலர் அறுத்துக் கொல்லப்படப்போகும் மாடு போல மடத்தனமாக அதைப் பின்பற்றுகிறார்கள் (நீதிமொழிகள் 7:22). பத்துக் கட்டளைகள் விபச்சாரப் பாவத்துக்கு எதிராக எச்சரிக்கின்றன (யாத்திராகமம் 20:14).

டிஜிட்டல் உலகின் பயன்பாட்டில் நான் எச்சரிக்கையாக இருக்கிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran