திருடப்பட்ட பணத்திற்கான இழப்பீடு

ரஞ்சித் சிறுவனாக இருந்த போது, அதாவது 1970ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டுக்காரரான சுப்பிரமணியம் மற்றும் எல்வாய் ஆகியோரிடம் இருந்து இலங்கை ரூபாய் 37.50 திருடினான். பின்னர், ரஞ்சித் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து பல சிறிய வேலைகள் செய்தான்,  பின்னர் கேட்டரிங் தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். “தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்” (சங்கீதம் 37:21) என்ற வேதவசனம் அவனிடம் கிரியைச் செய்தது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மீண்டும் இலங்கைக்குச் சென்று அவர்களின் சந்ததியினரைக் கண்டான், மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.  ரஞ்சித் தலா ரூ. 70000 இழப்பீடாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்துடன் ஒப்புரவாகிக் கொண்டான் (டெக்கான் ஹெரால்ட்,  டிசம்பர் 13, 2024 மற்றும் பிற தொலைக்காட்சி செய்தி சேனல்கள்). உண்மையான மனந்திரும்புதலில் இழப்பீடு, மறுசீரமைப்பு மற்றும் ஒப்புரவாகுதல் ஆகியவை அடங்கும்.

வேதாகமம்:  
திறந்த மனதோடும், விருப்பமுள்ள இருதயத்தோடும் வேதாகமத்தைப் வாசிக்கும் மக்களால் தேவனுடைய குரலைக் கேட்க முடியும். வேதாகமம் ஒரு செத்த இலக்கியம் அல்ல, அது ஒரு உயிருள்ள ஆவணம், இன்றும் தேவன் தனது எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் பேசுகிறார். ரஞ்சித் தான் ஒரு பொல்லாதவன் என்பதை புரிந்துகொண்டான், ஏனென்றால் அவன் சிறுவனாக இருந்தபோது கடன் வாங்கினான் அல்லது திருடினான், அதை இன்னும் திருப்பித் தரவில்லை. பின்னர் அவன் கடினமாக சம்பாதித்த பணம் என்றாலும், அதை திருப்பிச் செலுத்த சரியான நடவடிக்கை எடுத்தான்.

மீட்பு: 
இந்தியாவிலிருந்து, அவன் இலங்கைக்குச் சென்று குடும்பத்தைப் பார்ப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டான். அவன் பணம் கொடுக்க வேண்டிய தம்பதியினர் இறந்துவிட்டனர். கொடுக்காமல் இருப்பதற்கு அவன் அதை ஒரு சாக்காகக் கூறவில்லை.  அதற்கு பதிலாக, அவன் தம்பதியினரின் பிள்ளைகளான மூன்று மகன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தான்.  அதிலும் அவன் அற்பமான தொகையைக் கொடுக்கவில்லை, வட்டி மற்றும் பிற காரணிகளைக் கணக்கிட்டு, வாரிசுகள் மூவருக்கும் தலா 70000 கொடுத்தான்.

சகேயு ஒரு மாதிரி:
எரிகோ நகரத்தில், வரி வசூலிக்கும் ரோமானிய பிரதிநிதியாக சகேயு இருந்தான். அவன் அளவுக்கு அதிகமாக வசூலித்தான். கர்த்தர் அவனின் வீட்டிற்குச் சென்றார், அவனுக்கு பாவமன்னிப்பு கிடைத்தது, சட்டவிரோதமாக வசூலித்த அனைவருக்கும் நான்கு மடங்கு கொடுக்க உடனடியாக தீர்மானித்தான்
(லூக்கா 19:8). மோசேயின் பிரமாணம் ஒரு திருடன் திரும்ப கொடுக்கும் போது இரண்டு மடங்கு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் சகேயு தேவைக்கு அதிகமாகச் செய்தான் (யாத்திராகமம் 22:4). ஒநேசிமுவால் திருடப்பட்ட பணத்தை பவுல் தன்னார்வத்துடன் திருப்பித் தர முன்வந்தார் (பிலேமோன் 1:18).

மனந்திரும்புதல் என்பது இழப்பீடு, மறுசீரமைப்பு மற்றும் ஒப்புரவாகுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை நான் புரிந்துகொள்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran