கிறிஸ்தவ இன்பவாதம் (Christian Hedonism)

ஜான் பைப்பர் கற்பித்த கிறிஸ்தவ இன்பவாதம் (Christian Hedonism) என்பது, "நாம் தேவனில் முழுமையான திருப்தி அடையும்போது, தேவன் நம்மில் அதிகமாக மகிமைப்படுகிறார்" என்ற இறையியல் நம்பிக்கையாகும். பொதுவாக இன்பவாதம் (Hedonism) என்பது இன்பத்தைத் தெய்வமாக்கி, அதையே வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளாகக் கருதும் தவறான கொள்கையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ இன்பவாதம் என்பது, தேவனிடத்தில் மட்டுமே உண்மையான திருப்தியையும் மகிழ்ச்சியையும் தேடி, அவர் அருளும் ஆசீர்வாதங்களை நன்றியுணர்வோடு அனுபவிக்கும் நீதியான வாழ்க்கை முறையாகும்.
"நீர் ஜீவவழியை எனக்குக் காண்பிக்கிறீர்; உம்முடைய சந்நிதியில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11).

அவரில் காணும் இன்பம்:
உலகம் பலவிதமான இன்பங்களை வழங்குகிறது. ஆனால் மோசே, எகிப்தின் பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவற்றால் கிடைக்கும் தற்காலிக இன்பங்களைப் பாவமானவையாகக் கருதி அவற்றை நிராகரித்தார். அதற்குப் பதிலாக கிறிஸ்துவுக்காக நிந்தையைச் சகித்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்; மேலும் நித்திய பலனை நோக்கிப் பார்த்தார். இதனால் அவர் தேவனிலே உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டடைந்தார். அதன் மூலம் தேவன் மகிமைப்படுத்தப்பட்டார்.
தேவன் மனிதரின் இருதயத்தில் நித்தியத்தை வைத்திருக்கிறார் (பிரசங்கி 3:11). ஆகவே மனிதனின் ஏக்கம், விருப்பம், தேடல் ஆகிய அனைத்தும் தேவனில் மட்டுமே நிறைவேற வேண்டும். தேவனை விட்டு விலகி மகிழ்ச்சியைத் தேடுபவர்களை வேதாகமம் கண்டிக்கிறது. தேவனைப் புறக்கணிப்பதும், அவருடைய அழைப்பையும் வழியையும் அலட்சியம் செய்வதும், அவருக்கு எதிராகக் கீழ்ப்படியாமையில் வாழ்வதும், மகிழ்ச்சியைத் தவறான வழியில் தேடும் பாவமான செயலாகும் (எரேமியா 2:13).

பரிபூரண ஆனந்தம்:
மனிதனின் மகிழ்ச்சிக்கான ஆழ்ந்த ஏக்கம், கர்த்தருக்குள் காணப்படும் சந்தோஷத்தில் மட்டுமே முழுமையாக நிறைவேறுகிறது. கிறிஸ்தவ இன்பவாதம் என்பது, பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் நீதி, சமாதானம், ஆனந்தம் ஆகியவற்றில் வாழ்ந்து, தேவனுடைய ராஜ்யத்தின் முன்னுரிமைகளை நாடுவதாகும் (ரோமர் 14:17). சந்தோஷம் பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாகும் (கலாத்தியர் 5:22–23). "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பலன்" (நெகேமியா 8:10). சிறையிலிருந்தபோதும், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்" என்று பவுல் விசுவாசிகளை ஊக்குவிக்கிறார் (பிலிப்பியர் 4:4). இத்தகைய சந்தோஷம் தேவனுக்கே மகிமையையும் கனத்தையும் செலுத்துகிறது. மேலும், விசுவாசத்திற்கான நித்திய பலன் இருப்பதால் இந்த சந்தோஷம் உறுதிப்பெறுகிறது (எபிரெயர் 11:6).

ஆராதனை: 
தேவனில் முழுமையான திருப்தி அடைவது உண்மையான ஆராதனையாகும். ஏனெனில் அது உலகப் பொருட்கள், சுயநலம் அல்லது மனிதர்களிடத்தில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தேடாமல், தேவனில் மட்டுமே மனநிறைவை காணச் செய்கிறது.
சி. எஸ். லூயிஸ் கூறியபடி, பல கிறிஸ்தவர்கள் எளிதில் திருப்தியடைந்து விடுகிறார்கள்; ஆனால் அவர்கள் கர்த்தருக்குள் இன்னும் ஆழமான ஆனந்தத்தை நாட வேண்டும். விசுவாசிகள் கிறிஸ்துவில் முழுமையாக திருப்தியடையும்போது, கிறிஸ்து அவர்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்தப்படுகிறார் (பிலிப்பியர் 1:20–21).

சிந்தனைக்காக:
நான் கர்த்தரில் முழுமையான திருப்தியுடன் வாழ்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran