ஒரு இளைஞன் சில தீய மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். சிலர் அவன் தமது விசுவாசத்திற்காக உயிர் தியாகம் செய்த ஒரு மறைச்சாட்சியென்று (Martyr) நம்புகின்றனர். மற்றவர்கள், அவன் பிறரை இழிவுபடுத்தும் கருத்துகளையும் உரைகளையும் வெளிப்படுத்தியதன் விளைவாகவே உயிரிழந்தான் என்று அந்தக் கருத்தை மறுக்கின்றனர். பிந்தைய உண்மை (Post-truth) சமுதாயத்திலும், டிஜிட்டல் உலகிலும், உண்மையை அறிதல் ஒரு குழப்பமான பாதையாக உள்ளது. இத்தகைய சூழலில், கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள மதிப்பீட்டு அளவுகோல் இதுவே;
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத்தேயு 7:16).
உண்மைக்காக தைரியமாகப் பேசியவரா?
அந்த இளைஞன் சுவிசேஷத்தை தைரியமாகப் பிரசங்கித்தவர் என்றும், உண்மையை வெளிப்படையாக அறிவித்தவர் என்றும் கூறப்படுகிறது. இளைஞர்களிடம் சென்று, அவர்களோடு உரையாடி, விவாதித்து, எதிர்ப்பு, கேலி, தொந்தரவு ஆகியவற்றைச் சந்தித்தபோதிலும் அவர் பின்னடையவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையைத் தைரியமாகப் பேசுவது மட்டும் ஒருவரை மறைச்சாட்சியாக மாற்றிவிடாது.
ஒருவரின் வாழ்க்கை, பேச்சு, செயல்கள் என எல்லாவற்றிலும் தேவ ராஜ்யத்தின் மதிப்புகள் வெளிப்படுகிறதா என்பதே முக்கியம். தைரியமான பிரசங்கிகளும், அதிசயங்கள் செய்பவர்களும் கூட, பொல்லாத கிரியைக்காரர்கள் எனக் கர்த்தரால் நிராகரிக்கப்படலாம் (மத்தேயு 7:21).
வெறுப்பைத் தூண்டும் தைரியமான பேச்சுகளா?
அவர் தைரியமான பிரசங்கியாயிருந்தாலும், பிற இனங்களையும் நிறங்களையும் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார் என்பதும் உண்மை. வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் அறிவில் தாழ்ந்தவர்கள் என்று கருதுவது, தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களின் மரியாதையை பறிப்பதற்கு சமம்.
சில பாவிகள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற அவரது கருத்து, சுவிசேஷம் போதிக்கும் அன்பிற்கு முற்றிலும் முரணானது. அவர், சரியான வார்த்தைகளைப் பேசியும், செயல்களில் சுவிசேஷ அன்பை வெளிப்படுத்தாத பரிசேயரைப் போன்றவராக இருந்தார்.
பிறரை இழிவுபடுத்துதல்:
ஏழைகளை (திக்கற்றோர், ஒடுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர்) பரிகாசம் செய்பவன், அவர்களை உருவாக்கிய தேவனை அவமதிக்கிறான் (நீதிமொழிகள் 17:5). மாற்றுத்திறனாளி ஒருவர் நடக்க ஒரு தடியைச் சார்ந்திருக்க வேண்டியது போல, உறுதுணை நடவடிக்கைகள் (Affirmative Action / Reservation) அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. அத்தகைய உதவிகளை பறிக்க வேண்டும் என்று ஒரு பிரசங்கியார் பேசினால், அது நீதியான செயல் அல்ல; அது பொறாமையின் வெளிப்பாடு.
விதை விதைத்தலும் அறுவடையும்:
“காற்றை விதைக்கிறவர்கள் சுழல்காற்றை அறுப்பார்கள்”
(ஓசியா 8:7). காரணமின்றி கிறிஸ்தவர்கள் வெறுக்கப்படும் இவ்வுலகில், அவர்கள் துன்புறுத்தலும், சகிப்புத்தன்மையின்மையும், வன்முறையும் அனுபவிக்க நேரிடும்.
ஆனால், வன்முறையை விதைப்பவர்கள், வன்முறையின் பலனை அனுபவிப்பது உறுதி.
நான் பலன் தரும் வாழ்க்கையை நடத்துகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran