மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்னவென்று கேட்டால், அவர்கள் பலவிதமான பதில்களை அளிக்கிறார்கள். வயதிலும், நாடுகளிலும், பண்பாடுகளிலும், வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் வேறுபாடுகள் உள்ளதால், ஒவ்வொருவருக்கும் விருப்பமானவை பலவாக இருக்கலாம். ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்கள் அவர்களுக்குள் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். இருப்பினும் ஆண்டவரின் சமூகத்தில் இருப்பதை ஒப்பிடுகையில் எல்லா நல்ல விஷயங்களும் மங்கிப்போகின்றன. இதைதான் சங்கீதக்காரன் இப்படியாக கூறுகிறான்; “வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது” (சங்கீதம் 84:10). மிகவும் மதிப்புமிக்கவை, விருப்பமானவை, சாதிக்க வேண்டியவை என்று நம்மால் எண்ணப்படும் அனைத்தும் அவருடைய நித்யமான பிரசன்னத்தில் நாம் பெறும் நிறைவிற்கு ஒப்பாக முடியாது. அவரது பிரசன்னத்தில் நிறைவேறிய சில முக்கிய விருப்பங்கள் இங்கே.
அன்பு:
மனிதர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்களாகவும், மதிக்கப்படுகிறவர்களாகவும், நிபந்தனையற்ற அன்பைப் பெறுகிறவர்களாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் வருத்தத்துடன் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், மனித அன்பு வரம்புடையது; ஒருபோதும் நிரந்தரமல்ல. தந்தை-தாயின் அன்பு, பிள்ளைகளின் அன்பு, சகோதரர்-சகோதரிகளின் அன்பு, துணைவரின் அன்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்பு என இவை அனைத்தும் ஒரு கட்டத்தில் நிறைவடைகின்றன. ஆனால், நம்மை நன்கு புரிந்துகொள்கிறவர் ஆண்டவர். மனந்திரும்பி வந்த இளைய குமாரனை ஏற்றுக் கொண்டதுபோல மனந்திரும்பி வந்த பாவியை அவர் நிபந்தனையின்றி ஏற்கிறார், மரியாதை அளிக்கிறார், உயர்ந்த பதவியுடன் கௌரவிக்கிறார், மேலும் கொண்டாட்டம் நடைபெறுகிறது. எந்த மனித அன்பைக் காட்டிலும் தேவ அன்பு மேலானது.
மகிழ்ச்சி:
மகிழ்ச்சி என்பது பலர் விரும்பும் ஒன்று, ஆனால் அது நேரங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொருத்தே அமையும். மகிழ்ச்சி என்பது உணர்ச்சிகளால் கட்டுப்படாத ஒரு நிலையான மனநிலையாகும். எனவே, ஒரு விசுவாசி எப்போதும் ஆண்டவரில் ஆனந்தப்பட முடியும் (பிலிப்பியர் 4:4).
சமாதானம்:
மனிதர்களின் மற்றொரு நாட்டம் சமாதானமாகும். சில தத்துவவாதிகள், அதைக் கல்லறையில் மட்டுமே காண முடியும் என்கின்றனர். ஆனால், ஆண்டவர் எல்லா சூழ்நிலைகளிலும் நிலையான சமாதானத்தை வாக்களித்துள்ளார். இந்த அமைதியை உலகம் வழங்கவும் முடியாது பறிக்கவும் முடியாது (யோவான் 14:27).
இலவச உணவு:
ஒரு கணிப்பில் சிலர், தாங்கள் மிகவும் நேசிக்கும் விஷயம் இலவச உணவாகவே இருப்பதாக கூறினர். மனிதர்கள் மாறுவதில்லை. ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்த அதிசயத்தில் தேவ கிருபையை அனுபவித்தவர்கள், ஆண்டவரைத் தொடர்ந்து தேடினர். ஆனால், நிலைத்த உணவையும், ஆவிக்குரிய விசயங்களையும் குறித்த ஆய்வில்லாமல், இவ்வுலக உணவுக்கே அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர்களின் நிலைக்கு ஆண்டவர் கடிந்து கொண்டார். (யோவான் 6:27).
வெகுமதி:
மனிதர்கள் அங்கீகாரத்தையும் வெகுமதியையும் பெற விரும்புகிறார்கள். ஒரு கோப்பை தண்ணீரை வழங்கும் ஒரு சிறிய உதவிக்கு கூட, தேவன் எல்லாரையும் மதித்து வெகுமதி அளிக்கிறார் (மத்தேயு 10:42).
இவ்வுலகில் ஆயிரம் காரியங்களுக்கு நான் ஏங்குவதை விட நான் அவருக்காக ஏங்குகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran