கர்த்தராகிய இயேசுவில் புதிதாக விசுவாசம் கொண்ட ஒருவர் தனது விரக்தியைப் பகிர்ந்துகொண்டார். அதாவது “ஐந்து நிமிடங்கள்கூட நான் ஸ்தோத்திரமும் ஜெபமும் செய்ய முடியவில்லை. ஆனால், பலர் 30 நிமிடங்கள், 60 நிமிடங்கள் செய்கிறோம் என்கிறார்கள்”. பல கிறிஸ்தவர்களுக்கு, துதியும் ஜெபமும் மிகவும் கடினமான காரியங்களாக இருக்கின்றன. இன்னும் சிலர் அதை முக்கியமில்லாத செயலாகவே நினைக்கிறார்கள். ஆனாலும், தேவஜனங்கள் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செய்யவும், அவர் நாமத்தை அழைக்கவும், அவரின் கிரியைகளை மக்களிடம் அறிவிக்கவும் வேண்டும். தேவனுக்கு மகிமை கொடுக்க வேண்டும். ஸ்தோத்திரம் மூன்று காரியங்களைச் செய்கிறது (சங்கீதம் 105:1–3).
தேவனை மகிமைப்படுத்துதல் (Magnifying God):
ஸ்தோத்திரம் செய்வது என்றால் தேவனின் குணாதிசயங்களை உயர்த்திப் பேசுவது. ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடி சிறியவற்றை தெளிவாகப் பார்க்க உதவுகிறது. அதைப் போல, ஒரு விசுவாசி தேவனின் குணாதிசயங்களை அறிந்து அவரை உயர்த்திப் புகழ்கிறான்.
கர்த்தருடன் நடந்து செல்லும் போது, அவர் யார் என்பதை ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்துக் கொள்ள முடியும். தேவனின் மகத்துவமான குணாதிசயங்கள்; அவரின் பரிசுத்தம், ஆற்றல், வல்லமை, மகிமை, நீதி மற்றும் அற்புதமான கிரியைகள் ஆகும். அவரின் மிகப்பெரிய கிரியைகள்; படைப்பு, மீட்பு, இரட்சிப்பு ஆகும். துதிக்கு தகுதியான பல அற்புதங்கள் இன்னும் உண்டு.
ஆத்துமாவை உந்துதல் (Inspires the Soul):
ஸ்தோத்திரம் விசுவாசியை தனது கடந்த நாட்களை நன்றியுணர்வோடு நினைப்பதற்குச் செய்கிறது. பரிசுத்தமான தேவன் தமது பரிசுத்தத்தில் சமரசப்படாததால், தமது ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை, கல்வாரி சிலுவையில் மரிக்க அனுப்பினார்; அவர் அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த வேதனையையும், தியாகத்தையும், மனமுவந்து செய்த இரட்சிப்புப் பலியையும் நினைக்கும் போது, விசுவாசியின் இருதயம் மகிமையும் அன்பையும் பாடத் தூண்டப்படுகிறது. ஸ்தோத்திரிக்கும் போது, ஆத்துமா தேவனுக்காக ஏங்குகிறது.
உலகுக்குச் சாட்சியாகுதல் (Witness to the World):
பல கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, “கர்த்தரைத் துதிப்போம் (Praise the Lord)” என்று வாழ்த்துகிறார்கள்.
கர்த்தரிலுள்ள சகோதரனையும் சகோதரியையும் சந்திக்கும் மகிழ்ச்சியில் தேவனைத் துதிக்கிறார்கள். ஆம், இருவரோ மூவரோ கர்த்தரின் நாமத்தில் கூடும்போது அங்கே கர்த்தர் இருப்பார். ஆகையால், “ஸ்தோத்திரம்” என்று சொல்லுவது தகுதியானது. இந்த வாழ்த்தைப் பலர் கேட்டு, “ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? அதற்கு அர்த்தம் என்ன?” என்று ஆச்சரியப்படலாம்.
அப்படிப்பட்ட தருணங்களில் உண்மையான ஜீவனுள்ள தேவனைச் சாட்சியம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
அதேசமயம், விசுவாசிகளின் ஐக்கியத்தின் மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர முடிகிறது.
நான் கர்த்தரை ஸ்தோத்திரிக்கும் ஆவிக்குரிய ஒழுக்கத்தையும் பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டு இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran