பர்னபாவின் வழிகாட்டும் (Mentoring) கொள்கைகள்

ஒருவரை வாழ்க்கையில் சிறந்து விளங்கும்படி வழிநடத்துவது ஒரு தீவிரமான செயல்முறை. நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படாவிட்டால், உண்மையான வழிகாட்டுதல் நடைபெறாது.

1. பகுத்தறிதல் (Discernment):
ஒரு நல்ல வழிகாட்டியிடம் ஒருவரின் திறமையை கண்டறியும் விசேஷமான வரம் இருக்கும். அவர்களின் அழைப்பையும் வளர்ச்சிப் பாதையையும் உணரக்கூடியவர். பர்னபாவுக்கு இப்படிப்பட்ட பகுத்தறிதல் இருந்தது. அதனால் தான் அவர் சவுலையும் (பவுல்), யோவான் மாற்க்கையும் எதிர்கால தலைவர்களாகக் கண்டறிந்தார். பவுல் மகத்தான சுவிசேஷகராகவும், வேதாகம அறிஞராகவும், புதிய ஏற்பாட்டில் பல நூல்களை எழுதியவராகவும் ஆனார். யோவான் மாற்க்கும் சிறந்த ஊழியக்காரராகவும், மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியராகவும் விளங்கினார்.

2. ஆதரவு மற்றும் பரிந்துரை (Advocacy):
சவுல் தமஸ்குவிலிருந்து வந்தபோது யாரும் அவரை நம்பவில்லை. அப்போது பர்னபா அவரைத் தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக்கொண்டு, அப்போஸ்தலர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

 3. அழைத்து இணைத்தல் (Recruitment):
எருசலேமிலுள்ள சபை, அந்தியோகியாவிலுள்ள புதிய சபைக்குப் போதிக்க பர்னபாவை நியமித்தது. அந்தப் பணியைப் புரிந்துகொள்வதற்காக அவர் அந்தியோகியாவுக்குச் சென்றபோது, அதைச் செய்வதற்கு இன்னும் அதிகமான ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே, பர்னபா சவுலைத் தனது கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டார். அவரைச் சேர்த்துக்கொள்வதற்காக அவர் தர்சு வரை சென்றார்.

4. ஒன்றாகச் செயல்படுதல் (Working Together): 
பர்னபாவும் சவுலும் அந்தியோகியாவில் ஒன்றாகப் பணியாற்றினர். ஒரு போதகராக சவுலின் வரங்களை வளர்த்துக்கொள்ள பர்னபா ஒரு சூழலை உருவாக்கினார். பின்னர், மிஷனரிப் பணி எனும் விசேஷப் பணிக்காக தேவ ஆவியானவர் அவர்களைப் பிரித்தார். சபையின் தலைவர்கள் அவர்களைப் பகுத்தறிந்து மிஷனரிகளாக நியமித்தனர் (அப்போஸ்தலர் 13:1-2).

5. அதிகாரமளித்தல் (Empowering):: 
பர்னபா, பவுலுக்கு தலைமை பொறுப்பு ஏற்கும் வாய்ப்பை அளித்தார். முதல் மிஷனரி பயணத்தில் சைப்பிரசை கடந்தபின், லூக்கா “பவுலும் அவருடைய கூட்டத்தாரும்” என்று எழுதுகிறார் (அப்போஸ்தலர் 13:13). பவுல் முன்னிலையில் வர பர்னபா தாழ்மையுடன் இடம் கொடுத்தார்.

6. விடுவித்து அனுப்புதல் (Let Go, Set Free):
பவுல் தனியாகச் செல்ல வேண்டிய காலம் வந்தபோது, பர்னபா அவரிடமிருந்து பிரிந்தார். அது முழுமையான சமாதானத்துடன் நடந்த பிரிவு அல்ல; ஆபிரகாமும் லோத்தும் பிரிந்ததுபோல ஒரு பிரிவு. பவுல் சீலாவைத் தேர்ந்தெடுத்து தனது மிஷனரி பயணத்தைத் தொடர்ந்தார். பர்னபாவோ, பவுலை வழிநடத்தியதுபோல் மாற்க்கையும் வழிநடத்தினார்.

7. அடுத்த தலைமுறையை உருவாக்குதல் (The Next Generation):
பர்னபா, யோவான் மாற்கு என்ற ஒரு இளம் தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வழிகாட்டும் செயல்முறையைத் தொடங்கினார், அதன் விளைவாக அவர் ஒரு எழுத்தாளராக ஆனார். யோவான் மாற்கு தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒரு மதிப்புமிக்க தலைவராக மாறியிருப்பதை பவுல் கூட உணர்ந்துகொண்டார் (2 தீமோத்தேயு 4:11).

எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி (Mentor) இருக்கிறாரா? நானும் மற்றவர்களை வழிநடத்துகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran