முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட துன்புறுத்தல்கள்

1994 ஆம் ஆண்டு முதல் அரசாங்க பதிவு இன்றி, நொய்டா நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த முதியோர் இல்லம், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தபின் விசாரணைக்குட்பட்டது. ஆய்வின்போது, அங்கிருந்த நாற்பத்து இரண்டு முதியவர்களில் சிலர் அடித்தள அறைகள் போன்ற இடங்களில் பூட்டப்பட்டிருந்தார்கள். சிலர் அரைகுறை ஆடையுடன், அசுத்தமான, துர்நாற்றமுள்ள உடைகளில் காணப்பட்டார்கள் (டெக்கான் ஹெரால்ட், ஜூன் 28, 2025).

சாயல்:
“மக்களை மேய்ப்பரற்ற ஆடுகள் போலக் கண்டு, இயேசு கிறிஸ்து இரக்கமடைந்தார்” (மத். 9:36).  அந்த இரக்கமே சீஷர்களின் இருதயங்களையும் நிரப்பி, அன்புடனும், பரிவுடனும், நம்பிக்கையற்றவர்களை உயிரடையச் செய்தது. அன்னை தெரசா தேவனுடைய அன்பின் ஓர் உயிருள்ள சாட்சியாக உலகுக்கு வெளிப்பட்டார். ஆனால் சிலர் அந்த மாதிரியை வெளிப்புறமாக மட்டும் பின்பற்றி, உள்ளார்ந்த தேவனுடைய அழைப்பு, அபிஷேகம், அன்பு ஆகியவற்றின்றி நடக்கிறார்கள்.  தேவனுடைய ஆவியால் உந்தப்படாத பின்பற்றுதல், மக்களுக்கு நன்மையை அளிக்காது; மாறாக துயரம், வேதனை, வலி ஆகியவற்றைத் தரும்.

தர்மம் வணிகமாக்கப்பட்டது:
சிலர் சேவையை வணிகத்தின் பார்வையில் காண்கிறார்கள்.  இதன் விளைவாக, முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த கொடுமை போன்ற விபரீதங்கள் தோன்றுகின்றன.  ஆம், தர்மசேவை என்ற பெயரில் நிதியைச் சேகரிக்கலாம் – தனிநபர்களிடமிருந்து, நிறுவனங்களிடமிருந்து (CSR), அரசிடமிருந்தும் கூட. ஆனால், நிதிதான் நோக்கமாக மாறும் போது, சேவை பலியிடப்படுகிறது. பணியாளர்கள் செல்வந்தர்களாகி விடுகிறார்கள்; ஆனால் முதியவர்களின் கண்களில் கண்ணீர், உள்ளங்களில் புலம்பல் மட்டுமே நிரம்பி நிற்கிறது.

ஒப்பீட்டின் கபடம் (Relativism):
முதியோர் இல்லத்தில், ஒரு நபர் அங்கு நடக்கும் அலட்சியம் மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி, “இங்கிருக்கும் ஏற்பாடுகள் மற்ற பல முதியோர் இல்லங்களை விடச் சிறந்ததுதான்” என்று கூறினார். இதில் இரண்டு உண்மைகள் ஒன்றிணைகின்றன: முதலாவது, போதிய அடிப்படை வசதிகளும் (infrastructure) போதுமான கவனிப்பும் இல்லாத பல முதியோர் இல்லங்கள் உள்ளன. இரண்டாவது, இந்த இல்லத்தை நடத்தியவர்கள் தாங்கள் வழங்கிய சராசரியான சேவைக்கே திருப்தி அடைந்து, தங்களைப் புகழ்ந்து கொண்டனர். அரசாங்கத்தின் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, இந்த நிறுவனம் மற்ற மோசமான நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் உயர்ந்த தார்மீக நிலைப்பாட்டைக் கோரியது. “தங்களைத் தாங்களே புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு, மூடர்கள் ஆனார்கள்” (ரோமர் 1:22) என்ற வேத வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

அக்கறையும் பரிவும் – தெய்வீக அழைப்பின் பலன்:
மக்களுக்குச் சேவை செய்வது எளிய காரியம் அல்ல. உண்மையான சேவை, தேவனுடைய அழைப்பையும், பரிசுத்த ஆவியின் பலத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அன்பு, தாழ்மை, புரிதல், பரிவு – இவை அனைத்தும் தேவனிடமிருந்து வரும் வரங்கள். தேவ அழைப்பையும் தேவ அதிகாரத்தையும் உணராவிட்டால் அன்போடும் அக்கறையோடும் சேவை செய்ய முடியாது. 

நான் மற்றவர்களிடம் அன்போடும் அக்கறை மனப்பான்மையோடும் சேவை செய்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran