செவி கொடுக்கும் தேவன்

ஒரு நபர் கிறிஸ்தவர்களைப் பார்த்து, அவர்கள் ஜெபித்து நேரத்தை வீணடிப்பதாகவும், "யார் கேட்கிறார்கள்? ஒருவேளை சுவர்களும் கூரைகளும் கேட்கலாம், வேறொன்றுமில்லை" என்றும் கேலி செய்தார். ஆனால் வேதாகமம் இப்படி கூறுகிறது; "ஜெபத்தைக் கேட்கிறவரே, உம்மிடத்தில் மாம்சமான யாவரும் வருவார்கள்" (சங்கீதம் 65:2). ஆம், 
பொய்த் தெய்வங்களுக்குக் காதுகள் இருக்கலாம், ஆனால் அவைகளால் கேட்கவோ, பதிலளிக்கவோ முடியாது(சங்கீதம் 135:17).

அனைவரும்: 
கர்த்தராகிய ஆண்டவர் சர்வ சிருஷ்டிகளுக்கும் தேவன். சிருஷ்டிகராகிய ஆண்டவர் உலகின் அனைத்து மக்களையும் நேசிக்கிறார். எனவேதான் அவர் தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பி, அனைவருக்காகவும் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் (யோவான் 3:16). கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மனிதர்களும் அவரிடமே வருகிறார்கள்.

எல்லா மொழிகளும்: 
தேவன் அனைத்து மொழிகளையும் அறிந்திருக்கிறார். தேவனுக்கு என்று ஒரு புனித மொழியோ அல்லது விருப்பமான மொழியோ இல்லை. ஆகவே, எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்புகளோடு அவரிடம் வரலாம்.

எல்லா நேரங்களிலும்:
தேவன் மனிதர்கள் சொல்வதை எல்லா நேரங்களிலும் கேட்கிறார். தம் மக்களை தன்னை நோக்கிக் கூப்பிட அவர் அழைக்கிறார்; அதோடு அதற்கு பதில் அளிப்பதாகவும், ஆச்சரியமான காரியங்களைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார் (எரேமியா 33:3).

சத்தம்:
தேவன் மொழிகளை மட்டுமல்ல, மக்களின் சொல்லப்படாத வார்த்தைகளையும் உணர்வுகளையும்  புரிந்துகொள்கிறார். திக்கிப் பேசுபவர்களும் ஜெபிக்கலாம், ஏனெனில் தேவன் புரிந்துகொள்கிறார். ஒரு குழந்தையும் நம்பிக்கையுடன் ஜெபிக்கலாம், ஏனெனில் தேவன் கேட்கிறார், புரிந்துகொள்கிறார். குறைந்த IQ உள்ளவர்களும் இருக்கிறார்கள்; அவர்களுடைய ஜெபங்களும் கேட்கப்படுகின்றன. மக்களின் முணுமுணுப்புகளையும் பெருமூச்சுகளையும் தேவன் கேட்கிறார். சில சமயங்களில் நாம் மிகவும் சோர்வாக இருக்கும்போது, வார்த்தைகளை வெளிப்படுத்த முடிவதில்லை; நம் பெருமூச்சு, நம் புலம்பல் என அனைத்தையும் கேட்கிறார் (ரோமர் 8:26-27).

சொல்லப்படாதவை:
தேவன் பேச முடியாதவர்களின் சொல்லப்படாத வார்த்தைகளையும் புரிந்துகொள்கிறார். ஆவிக்குரிய காரியமோ மற்றும் மன உளைச்சல் காரணமாகவோ உதடுகள் அசைந்தாலும், வார்த்தைகளை உச்சரிக்க முடியாதவர்களின் ஜெபங்களுக்கும் தேவன் பதிலளிக்கிறார். அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்தாள், அவள் உதடுகள் அசைந்தன, ஆனால் அவளுடைய சத்தம் கேட்கப்படவில்லை (1 சாமுவேல் 1:13).

எண்ணங்கள்:
மனிதர்கள் பேசுவதற்கு முன்பே தேவன் அவர்களுடைய வார்த்தைகளை அறிந்திருக்கிறார். இதன் பொருள், மனிதர்களின் மனதில் வட்டமிடும் எண்ணங்களை தேவன் நோக்குகிறார் அல்லது அறிந்திருக்கிறார் என்பதே (சங்கீதம் 139:4).

விருப்பங்கள்:
மனித விருப்பங்கள் இருதயத்திலும் உணர்ச்சிகளிலும்தான் எழுகின்றன. பின்னர், அவை எண்ணங்களாக மாறலாம். இருப்பினும், நல்ல ஆண்டவர் மனிதர்களின் இருதயங்களின் விருப்பங்களையும் ஏக்கங்களையும் கூட அறிந்திருக்கிறார் (சங்கீதம் 37:4).

நம்மை தேவன் கவனித்துக் கேட்கிறார், எனக்கு செவி கொடுக்கிறார் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran