கிறிஸ்தவர்களின் காத்திருப்பு பலனுள்ளதாய் இருந்து, அவர்களை தேவனுக்குப் பயனுள்ளவர்களாகவும் ஊழியத்திற்கு தகுதியானவர்களாகவும் மாற்றுகிறது. ஆனால் உலகத்தில் சிலர் காத்திருக்கிறார்கள்; இருப்பினும் அந்தக் காத்திருப்பு எந்த ஆவிக்குரிய பயனையும் அளிப்பதில்லை.
சௌகரியமான நேரத்திற்காகக் காத்திருப்போர்:
அப்போஸ்தலனாகிய பவுல், நீதியையும், சுயக்கட்டுப்பாட்டையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பெலிக்ஸிடம் பேசினார். அவன் பயந்தான்; தேவனுடைய செய்தியின் உண்மையை உணர்ந்தான். ஆனால் தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பவில்லை. அதனால், “சௌகரியமான வேளையில் உன்னை மீண்டும் அழைத்துப் பேசுவேன்” என்று கூறி தப்பித்துக்கொண்டான் (அப்போஸ்தலர் 24:25).
அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் காத்திருப்போர்:
சிலருக்கு சத்தியத்தைவிட அடையாளங்களும் அற்புதங்களும் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. அதனால் சுகமளித்தல், அற்புதங்கள் செய்கிறோம் என்று கூறும் பலரிடம் அவர்கள் அலைகிறார்கள். இவ்வாறு காத்திருப்பதன் மூலம், கர்த்தரில் வளரவும், அவருடைய சாட்சிகளாக வாழவும் கிடைக்கும் அருமையான வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
யாராவது வற்புறுத்த வேண்டும் என்று காத்திருப்போர்:
சிலர் தாங்களாக முன்வருவதில்லை. தேவனுடைய சித்தத்தைச் செய்ய யாராவது தங்களை வேண்டிக்கொள்ள வேண்டும், அழைக்க வேண்டும், வற்புறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய மனநிலையின்படி, தேவனும் சபைத் தலைவர்களும் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் போல எண்ணுகிறார்கள். ஆனால் தேவபக்தியுள்ளவர்கள் கர்த்தரின் அன்பினால் உந்தப்பட்டு செயல்படுகிறார்கள். பவுல் அப்படிப்பட்டவராக இருந்தார் (2 கொரிந்தியர் 5:14).
பிரபலங்களுக்காகக் காத்திருப்போர்:
உலகத்தில் திரைப்படம், விளையாட்டு, வணிகம், இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் பல பிரபலங்கள் உள்ளனர். அவர்களைக் காண காத்திருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இதேபோல் சில கிறிஸ்தவர்கள் தங்களுக்கென ஆவிக்குரிய பிரபலங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் பொய்யான நம்பிக்கைகளை அளிப்பவர்களாகவும், செழிப்பு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்களாகவும் இருக்கலாம். மணவாளனின் நண்பராக இருக்க வேண்டியவர்கள், கிறிஸ்துவின் மணவாட்டியான சபையைத் தங்களிடம் இழுக்க முயல்கிறார்கள் (யோவான் 3:29).
கர்த்தருக்காகக் காத்திருப்போர்:
கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் புதிய பலனைப் பெறுவார்கள். அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரப் பறப்பார்கள்; ஓடினாலும் சோர்வடையமாட்டார்கள்; நடந்தாலும் தளரமாட்டார்கள் (ஏசாயா 40:31). மரியாளைப் போல கர்த்தருடைய பாதத்தருகே அமர்ந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, தியானித்து, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் (லூக்கா 10:39-42). சங்கீதக்காரன், கர்த்தருடைய ஆலயத்தில் வாசற்படியிலே காத்திருக்கும் ஒருவனாயிருப்பதிலேயே மகிழ்ச்சியடைந்தான் (சங்கீதம் 84:10).
நான் கர்த்தருக்காகக் காத்திருந்து, நிலையானதும் மதிப்புமிக்கதுமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran