பிடிவாதமான கன்றும் கீழ்ப்படிதலுள்ள ஆட்டுக்குட்டியும்

“ஒவ்வொரு மணிநேரமும் எனக்கு நீர் தேவை” (I need Thee every hour) என்று சில பாடல்கள் ஆண்டவர்மீது முழுமையான சார்பை ஜெபத்தோடு வெளிப்படுத்துகின்றன. ஆனால், எப்பிராயீமைப் போல சில நேரங்களில் அவை வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்கக்கூடும். வேதாகமத்தில் தேவனால் கைவிடப்படுவதைப் பற்றிய ஒரு பயமுறுத்தும் எச்சரிக்கை உள்ளது. இஸ்ரவேல் தேவனைவிட்டு விலகியபோது, தேவன் அவர்களை “தனியே விட்டுவிட்டார்” என்று கூறப்படுகிறது. அதாவது, அவர்கள் தேவனைச் சார்ந்திராமல் சுயமாக வாழும்படி விட்டுவிடப்பட்டார்கள் (ஓசியா 4:17).

பிடிவாதமான கன்று:
எப்பிராயீம் இஸ்ரவேலின் மிகப்பெரிய கோத்திரமாக இருந்தது. எனவே, எப்பிராயீமைக்குறித்த தீர்க்கதரிசனம் முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் பொருந்துகிறது. இஸ்ரவேலர் பிடிவாதமான கன்றைப்போல தங்கள் வழியைவிட்டு விலகி, கட்டுப்பாடுகளையும் எல்லைகளையும் மீறி நடந்தார்கள் என்று ஓசியா கூறுகிறார் (ஓசியா 4:16). பிடிவாதமும், கலகமும், கீழ்ப்படியாமையும் கொண்ட இஸ்ரவேலால் ஆட்டுக்குட்டியைப் போல தேவனுடைய பாதுகாப்பை உரிமையுடன் கோர முடியவில்லை. கீழ்ப்படிதலுள்ள ஆட்டுக்குட்டிக்கு மேய்ப்பன் உண்டு; அது வெளிப்புறமான ஆபத்தான இடத்திலிருந்தாலும், மேய்ப்பன் அதைப் பாதுகாப்பான். ஆனால், தன் வழியில் பிடிவாதமாகச் செல்லும் கன்று மேய்ப்பனின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளாது.

விக்கிரகங்களுடன் இணைந்தவர்கள்: 
இஸ்ரவேல் தேசம் மீண்டும் மீண்டும் யெகோவாவை விட்டு விலகி, விக்கிரகங்களைத் தேர்ந்தெடுத்தது. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அவரைவிட்டு விலகியதால், அவர்களுடைய சொந்தத் தேர்வின் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கும்படி தேவன் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் அந்நிய தேவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்; அதுபோலவே அந்நிய தேசங்களின் கைகளில் அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஒடுக்கப்படுவதற்கும் இடமளிக்கப்பட்டது.

நியாயத்தீர்ப்பு: 
“அவனைத் தனியே விட்டுவிடு” என்ற தேவனுடைய வார்த்தை மிகவும் தீவிரமான எச்சரிக்கையாகும். அசீரியர்கள் வந்து அவர்களைத் தாக்கும்போது, இஸ்ரவேலர் தங்களுக்காகத் தாங்களே போராட வேண்டிய நிலை ஏற்படும். தேவன் அவர்களுக்காகப் போராடவும் மாட்டார்; அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கமாட்டார்.
பார்வோன் முதலில் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், மோசேயும் ஆரோனும் கூறிய வார்த்தைகளைக் கேட்க மறுத்தான் (யாத்திராகமம் 8:15, 32; 9:34). பின்னர் தேவன் பார்வோனின் இருதயம் கடினப்படுவதற்கு இடமளித்தார் (யாத்திராகமம் 10:20, 27).
பார்வோனைப் போல, தொடர்ந்து தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிற ஒருவர் மனந்திரும்பும் உணர்வையும் திறனையும் இழந்துவிடக்கூடும். பார்வோன் தேவனுக்கு எதிராகப் போராடிக்கொண்டே சென்று, இறுதியில் செங்கடலில் அழிந்துபோனான். அதுபோல, தேவனுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுகிறவர்கள் தங்களுடைய அழிவைத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள்.

பாதுகாப்பு:
விசுவாசிகள் ஒவ்வொரு நொடியும் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும். ஏனெனில், சாத்தான் எப்போதும் விழிப்புடன் இருந்து, தேவனுடைய மக்களைத் தாக்குவதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருக்கிறான். சாத்தான் பேதுருவைச் சோதிக்க அனுமதி கேட்டான். ஆனால் பேதுரு தேவனால் கைவிடப்படவில்லை. அவருடைய இரட்சகராகிய இயேசு அவனுக்காக ஜெபித்தார் (லூக்கா 22:31–32). எனவே, பேதுரு அந்தச் சோதனையிலிருந்து வெற்றியுடன் எழுந்தான்.

பாவமும் சுயமும்:
ஒருவர் தேவனால் கைவிடப்பட்ட நிலைக்குச் செல்லும்போது, அவர் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்லக்கூடும். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும், தேவனுடைய வார்த்தையின் போதனையும் இல்லாமல், ஒருவர் பாவம், மனச்சோர்வு, சந்தேகம், ஆபத்து மற்றும் மரணம் நிறைந்த சேற்றுக் குழியில் விழக்கூடும்.
ஆகையால், தேவனைச் சார்ந்திருப்பது ஒரு விருப்பம் (தெரிவு) அல்ல; அது ஒவ்வொரு விசுவாசிக்கும் அத்தியாவசியமான வாழ்க்கை முறையாகும். நம்முடைய சொந்த ஞானத்தையும் வலிமையையும் நம்பாமல், ஒவ்வொரு நாளும் ஆண்டவருடைய வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் நாட வேண்டும்.

நான் யார்?
பிடிவாதமான கன்றா?
அல்லது மேய்ப்பனுக்குக் கீழ்ப்படிகின்ற ஆட்டுக்குட்டியா?
 

Rev. Dr. J.N. Manokaran