அறியாமையும் அலட்சியமும்

அறியாமையினாலும் அலட்சியத்தினாலும் கிடைத்த வாய்ப்புகள் இழக்கப்படலாம்; பெற்ற சிறப்புரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம்; கொடுக்கப்பட்ட திறமைகள் பயன்படுத்தப்படாமல் புதைக்கப்படலாம். தேவனுடைய கிருபையை வீணாகப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று பவுல் விசுவாசிகளிடம் கெஞ்சியும், மன்றாடியும், வேண்டிக்கொள்கிறார். “தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடிக்கு, அவரோடுகூட வேலை செய்கிறவர்களாக இருந்து உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (2 கொரிந்தியர் 6:1). சீஷர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் நலனிலும் பவுல் அக்கறை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் மிகவும் தாழ்மையுடன் அவர்களிடம் மன்றாடுகிறார். இங்கு “வீணாக” என்பதன் பொருள்; வெறுமையானது, உள்ளடக்கமற்றது, நோக்கமற்றது, பலனற்றது என்பதாகும்.

நன்றியுணர்வுடன் பெற்றுக்கொள்ளுதல்: 
தேவனுடைய கிருபை என்பது எந்தத் தகுதியும் இல்லாத, தகுதியற்ற, நரகத்திற்குத் தகுதியான பாவிகள்மீது தேவன் காண்பிக்கும் இரக்கமும் அன்பும் ஆகும். தேவனுடைய கிருபை அளவற்றதும் இலவசமாகக் கிடைப்பதுமாகும். ஆனால், அந்தக் கிருபையைப் பெற்றவர்கள் அதை நன்றியுடனும் கவனத்துடனும் பயன்படுத்தாவிட்டால், அந்தக் கிருபையை வீணாக்கிவிடுகிறார்கள். ஆகவே, விசுவாசிகள் தேவனுடைய கிருபையை அன்புடனும், தாழ்மையுடனும், ஆர்வத்துடனும் பெற்றுக்கொண்டு, தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

கடினமாக உழைத்தல்: 
கிருபை என்பது நாம் கடந்த காலத்தில் செய்த, தற்போது செய்கிற அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிற எந்தவொரு செயலுக்கும் கிடைக்கும் கூலி அல்லது வெகுமதி அல்ல. மாறாக, தேவனுடைய பணியைச் செய்ய நம்மை ஊக்குவித்து, பெலப்படுத்துவதற்காக கிருபை கொடுக்கப்படுகிறது. அதனால்தான் பவுல், மற்ற அப்போஸ்தலர்களைவிட அதிகமாக உழைத்ததாகக் கூறுகிறார். தன்னிடம் இருந்த தேவகிருபை வீணாக்காமல், அதற்கேற்ப தனது வாழ்க்கையையும் ஊழியத்தையும் அர்ப்பணித்தார் (1 கொரிந்தியர் 15:10). நன்மை செய்வது ஒரு விசுவாசியின் அழைப்பு. அதை விடாமுயற்சியுடனும், மகிழ்ச்சியுடனும், அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். “எதையும் செய்யாமல் இருப்பது, ஏதாவது தவறு செய்வதைவிட பாதுகாப்பானது” என்று சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் செயலற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் தேவனுடைய கிருபை நம்மை மனந்திரும்புதலுக்கும், கீழ்ப்படிதலுக்கும், முழுமையான அர்ப்பணிப்புக்கும் அழைக்கிறது.

போதுமான கிருபை:
பவுல் தனது பலவீனங்களின் மத்தியிலும் தேவனுடைய கிருபையின் போதுமான தன்மையை அனுபவித்தார். அவருடைய வாழ்க்கையில் ஒரு நீடித்த உடல் உபாதை இருந்திருக்கலாம். அதற்காக அவர் தேவனை வேண்டிக்கொண்டபோது, கர்த்தர், “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று கூறினார் (2 கொரிந்தியர் 12:9). தேவனுடைய கிருபை நம்முடைய பலவீனங்களை நீக்குவது மட்டுமல்ல; அவற்றின் மத்தியிலும் நம்மை நிலைநிறுத்தி, வெற்றியுடன் வாழவும் பெலப்படுத்துகிறது.
இன்றைய சூழ்நிலைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ள தேவையான பெலனை தேவனுடைய கிருபை அளிக்கிறது.

கிருபையைத் தவறாகப் பயன்படுத்துதல்:
எந்த நல்ல பரிசையும் தவறாகப் பயன்படுத்த முடியும். அதுபோல தேவனுடைய கிருபையையும் தவறாகப் பயன்படுத்த முடியும்.
“கிருபை பெருகும்படி நாம் பாவத்தில் தொடர்ந்து வாழலாமா?” என்று சிலர் தவறாக வாதிட்டனர் (ரோமர் 6:1). கிருபை என்பது பாவம் செய்வதற்கான அனுமதிச்சீட்டு அல்ல. “தேவன் எல்லா எதிர்காலப் பாவங்களையும் மன்னித்துவிட்டார்; எனவே நான் விரும்பியபடி வாழலாம்” என்று நினைப்பது கிருபையைத் தவறாகப் புரிந்துகொள்வதாகும். உண்மையான கிருபை நம்மை பாவத்தில் தொடர்ந்து வாழச் செய்வதில்லை; மாறாக, பாவத்திலிருந்து விடுபட்டு பரிசுத்தமாக வாழச் செய்கிறது.

புதியதும் புதுப்பிக்கப்பட்டதுமான கிருபை:
தேவனுடைய கிருபை ஒவ்வொரு நாளும் புதிதாகக் கிடைக்கிறது. நேற்று பெற்ற கிருபையின் அனுபவம் மட்டும் இன்றைய சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது.
ஆகவே, விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து வரும் பரலோக வளங்களைப் பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய ஒழுக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். பெரிய காரியங்களாக இருந்தாலும் சிறிய காரியங்களாக இருந்தாலும், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13) என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

தேவனுடைய கிருபையை நான் சார்ந்து வாழ்கிறேனா? அந்தக் கிருபை என்னுடைய வாழ்க்கையின் மூலம் முழுமையாகச் செயல்பட நான் இடமளிக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran