பனி உடைக்கும் கப்பல்கள்

டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியதைப் பெரும்பாலான மக்கள் அறிவார்கள். இப்போது, பனிப்பாறைகளை உடைக்கக்கூடிய பனி உடைக்கும் கப்பல்கள் உள்ளன, இது பெரிய சரக்குக் கப்பல்களுக்கு வழி வகுக்கும். இவை வலிமையான இயந்திரம், உறுதியான ஓடுகட்டமைப்பு மற்றும் சிறப்பு வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் முன்னோடியாக சென்று தடையில்லா பாதையை உருவாக்குகின்றன. இதைப் போல, தேவன் தம் பிள்ளைகளுக்கு வாக்களிக்கிறார்; ” நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசாயா 45:2).

செங்கடலைப் பிரித்தல்:
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது, அவர்கள் செங்கடலின் கரையில் தப்பிச் செல்ல வழியில்லாமல் சிக்கிக் கொண்டிருந்தனர். பின்னால், 600 ரதங்களுடன் எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தனர். அந்த வேளையில், தேவன் வழியில்லாத இடத்தில் செங்கடலைப் பிளந்து அவர்களுக்கு ஒரு பாதையை உருவாக்கினார். அவர்கள் அந்தப் பாதையில் கடந்து விட்டனர். பின்னர், அதே பாதையில் சென்ற எகிப்தியர் அனைவரும் நீரில் மூழ்கி இறந்தனர் (யாத்திராகமம் 14:21-29).

வாக்குறுதி: 
தமது ஜனங்களை அவர்கள் இலக்குக்கு அழைத்துச் செல்ல, கடல் மற்றும் ஆழமான நீரிலும், காட்டிலும் வறண்ட பாலவனத்திலும் பாதைகளை உருவாக்குவதாக தேவன் வாக்குறுதியளித்துள்ளார் (ஏசாயா 43:16–19). பனிக்கலன்கள் அல்லது நீருக்குள் மறைந்துள்ள கற்கள் போன்ற தடைகள் இருக்கக்கூடும். இருப்பினும், தேவன் தம் மக்களை அவர்களின் இலக்குகளுக்கு அழைத்துச் செல்ல அவற்றின் வழியாக ஒரு பாதையை உருவாக்குகிறார். 

நேரான பாதைகள்: 
வளைந்த வழிகளில் செல்வது அபாயகரமும் மோசமானதுமானதாக இருக்கலாம். வாழ்க்கை என்பது ஒரு பயணம் போல; அதில் வழிகள் எப்போதும் நேராக இருக்காது. ஆனால், அவரை நம்புகிறவர்களுக்கு கர்த்தர் வழிகளைச் செம்மையாக்குகிறார் (நீதிமொழிகள் 3:5–6).

உயிர்த்தெழுதலின் வழி:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து, அரிமத்தியானான யோசேப்பின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபோது, பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட கூட்டம் என எல்லாரும் சந்தோஷப்பட்டனர். நரகத்தில் கூட, சாத்தான் தேவ குமாரனுக்கு எதிராக மனிதர்களைத் தூண்டி வெற்றி பெற்றதைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், தேவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி, மரித்தோரில் இருந்து கர்த்தரை உயிர்த்தெழச் செய்தார். அவர் என்றும் வாழ்கிறார். இரட்சிப்புக்கு ஒரே வழி உள்ளது, அது கர்த்தருடைய உயிர்த்தெழுதலால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்தெழுதலின் நியதி:
மரித்து போன எதையும் யாரையும் மீண்டும் உயிர்ப்பிக்க தேவனுக்கு வல்லமை உண்டு என்பதை தேவன் வெளிப்படுத்தினார். மரணமாகத் தோன்றும் சூழ்நிலைகளிலும், வழியில்லாத நிலைகளிலும் வழியை உருவாக்குவார் என்ற தேவனுடைய வாக்குறுதி என்பது அற்புதமான வரமாகும்.

 தேவன் எனக்கு நேர்த்தியான வழிகளை உருவாக்குவார் என்று நான் நம்புகிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran