கண்ணியமும் நற்பண்பும்

இன்றைய சமூகத்தில் பொதுவெளியில் மனிதர்களின் நடத்தை பெரும்பாலும் ஆணவம், அகந்தை, திமிர்த்தனம், ஏன் சில நேரங்களில் வன்முறை நிறைந்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில், சபை மக்கள் பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார் (தீத்து 3:2).

1. யாரையும் குறித்து தீமையாகப் பேசாதிருத்தல்
பிறரைப் பற்றிய புறங்கூறுதல், அவதூறு பேசுதல், தீய நோக்கத்துடன் பேசுதல், மறைமுகமாகப் பழிசுமத்துதல், சமூக ஊடகங்களில் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல் போன்றவற்றை பவுல் தடை செய்கிறார். ஒருவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு கிறிஸ்தவர் தமது வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் காக்க வேண்டும். பலர் மற்றவர்களைப் பற்றி பேசும்போது, உண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஊகம், கேள்விப்பட்ட செய்திகள், ஆதாரமற்ற தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பேசுகிறார்கள். ஒருவரைப் பற்றிப் பேசுவதற்கு முன், நாம் பேசப்போகும் வார்த்தைகள் உண்மையானவையா, அன்பானவையா, பயனுள்ளவையா என்பதை சிந்திக்க வேண்டும்.

2. சண்டையிடுவதைத் தவிர்த்தல்
கிறிஸ்தவர்கள் சமாதானத்தின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள். அவர் தமது சமாதானத்தை நமக்குத் தருகிறார் (யோவான் 14:27).
தேவனோடு சமாதானம், நம்முடைய உள்ளத்தில் சமாதானம் ஆகியவை இருந்தால், பிறரோடும் சமாதானமாக வாழ முடியும். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களையும் அவனோடு சமாதானப்படுத்துவார்” என்று நீதிமொழிகள் 16:7 கூறுகிறது. எனவே, கிறிஸ்தவர் சூடான வாக்குவாதங்களிலும், தேவையற்ற சண்டைகளிலும் ஈடுபடாமல், எந்த உரையாடலிலும் அமைதி, உறுதி, நிதானம், மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும்.
உறுதியாகப் பேசுவது தவறல்ல; ஆனால், மரியாதையையும் அன்பையும் இழக்காமல் உறுதியாகப் பேசுவதே கிறிஸ்தவ முதிர்ச்சி.

3. கனிவுடன் இருத்தல்
சூழ்நிலைகள் நம்மை அழுத்தத்திற்குள்ளாக்கினாலும், கிறிஸ்தவர்கள் அன்பு, அக்கறை, கனிவு, கிருபை ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும்.
கிருபையுடன் கூடிய கனிவு ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளமாகும். ஆணவமும், போட்டியும், சண்டையும் நிறைந்த கலாச்சாரத்தில், கிறிஸ்தவர்கள் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனைவரிடமும் கனிவாக நடந்துகொண்டார். தம்மைக் காட்டிக்கொடுத்த யூதாஸிடமும், தம்மை மறுதலித்த பேதுருவிடமும், தம்மைக் கைது செய்ய கெத்செமனே தோட்டத்திற்கு வந்தவர்களிடமும் அவர் கனிவை வெளிப்படுத்தினார். தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காகக்கூட, “பிதாவே, இவர்களை மன்னியும்” என்று வேண்டியபோது, அவருடைய கனிவும் இரக்கமும் வெளிப்பட்டது.

4. எல்லாரிடமும் முழுமையான மரியாதையுடன் நடந்து கொள்ளுதல்
இங்கே “முழுமையான மரியாதை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் குறைந்தது மூன்று முக்கியமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
முதலாவது – கனிவு;
கடுமையாகவும், காயப்படுத்தும் விதமாகவும், அவமதிக்கும் முறையிலும் நடந்து கொள்வதற்கு மாறாக, மென்மையான மற்றும் கனிவான மனப்பான்மையுடன் இருப்பது ஆகும்.
இரண்டாவது – தாழ்மை;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல தாழ்மையுடன் இருப்பதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தமது சீஷர்களின் கால்களைக் கழுவியதன் மூலம், இயேசு கிறிஸ்து தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
மூன்றாவது – இனிமையான நியாயத்தன்மை;
பெரும்பாலான மக்கள் தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் வலியுறுத்தி, “நான்தான் சரி; மற்றவர்கள் தவறு” என்று எண்ணி, பிறரிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். இதன் விளைவாக பொறாமையும் பகைமையும் உருவாகின்றன. ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் உரையாடல்களிலும், உறவுகளிலும், பிறருடன் கொண்டிருக்கும் தொடர்புகளிலும் நியாயமானவர்களாகவும், புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருக்க வேண்டும்.

நான் எல்லா மக்களிடமும் முழுமையான மரியாதையுடனும், கனிவுடனும், தாழ்மையுடனும் நடந்து கொள்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran