ஆதி முதற்கொண்டு ஆதரையில் வாழும் ஆதாரம் நீயே-வேதாகமே ஆதரவும் நீயே ஆகாயம் போல் உயர்ந்து ஆதவனாய் திகழும் ஆதாயம் நீயே-வேதாகமே ஆகாரமும் நீயே
சாதிக்க உதித்திட்ட காவியமும் நீயே போதிக்க பதித்திட்ட ஓவியமும் நீயே பேதையை மேதையாக்கி சாதனையாய் நிறுத்தும் போதகமும் நீயே-வேதாகமே சாதகமும் நீயே
உணர்விலே ஊடுருவும் மூச்சும் நீயே உயிரிலே உறவாடும் பேச்சும் நீயே உள்ளத்தைத் திறந்து உள்ளதைக் காட்டும் உண்மையும் நீயே-வேதாகமே நன்மையும் நீயே
வருந்துபவருக்கு வழிகாட்டும் விழியும் நீயே திருந்துபவருக்கு விழிப்பூட்டும் மொழியும் நீயே பாமரனை பாவலனாக்கி பாரினில் உயர்த்தும் சத்தியமும் நீயே-வேதாகமே நித்தியமும் நீயே
Author . Rev. M. Arul Doss
Rev. M. ARUL DOSS