102:1 கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
102:2 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
102:3 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
102:4 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
102:5 என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
102:6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
102:7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
102:8 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
102:9 நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
102:10 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
102:11 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
102:12 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
102:13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
102:14 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
102:15 கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
102:16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
102:17 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
102:18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
102:19 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
102:20 தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
102:21 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
102:22 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
102:23 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
102:24 அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
102:25 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
102:26 அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
102:27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
102:28 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.