1:1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!
1:2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
1:3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
1:4 பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
1:5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
1:6 சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்.
1:7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
1:8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப்பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
1:9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.
1:10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.