12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
12:3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
12:4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
12:11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
12:12 ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
12:13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
12:15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.