47:1 பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.
47:2 அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
47:3 அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.
47:4 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
47:5 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக் கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
47:6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
47:7 நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
47:8 அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
47:9 சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
47:10 அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
47:11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
47:12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.