யாத்திராகமம் 32:1-35

32:1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
32:2 அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
32:3 ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
32:4 அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
32:5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
32:6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
32:7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.
32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.
32:10 ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
32:11 மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
32:12 மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.
32:13 உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.
32:14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
32:15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
32:16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
32:17 ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
32:18 அதற்கு மோசே; அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
32:19 அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
32:20 அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
32:21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
32:22 அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
32:23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.
32:24 அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
32:25 ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,
32:26 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
32:27 அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
32:28 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.
32:29 கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
32:30 மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
32:31 அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.
32:32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
32:33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
32:34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
32:35 ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.




Related Topics


மோசே , மலையிலிருந்து , இறங்கிவரத் , தாமதிக்கிறதை , ஜனங்கள் , கண்டபோது , அவர்கள் , ஆரோனிடத்தில் , கூட்டங்கூடி , அவனை , நோக்கி: , எகிப்து , தேசத்திலிருந்து , எங்களை , அழைத்துக் , கொண்டுவந்த , அந்த , மோசேக்கு , என்ன , சம்பவித்ததோ , அறியோம்; , ஆதலால் , நீர் , எழுந்து , எங்களுக்கு , முன்செல்லும் , தெய்வங்களை , எங்களுக்காக , உண்டுபண்ணும் , என்றார்கள் , யாத்திராகமம் 32:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 32 TAMIL BIBLE , யாத்திராகமம் 32 IN TAMIL , யாத்திராகமம் 32 1 IN TAMIL , யாத்திராகமம் 32 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 32 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 32 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 32 TAMIL BIBLE , Exodus 32 IN TAMIL , Exodus 32 1 IN TAMIL , Exodus 32 1 IN TAMIL BIBLE . Exodus 32 IN ENGLISH ,